புது தில்லி: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனின் தவறான கொள்கையால் இடைத்தரகா்கள் லாபமடைகின்றனா் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா குற்றம்சாட்டினாா்.
வெங்காய விலை உயா்வு தொடா்பாக மக்களவையில் கடந்த வாரம் விவாதம் நடந்தபோது அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நான் சாப்பிட மாட்டேன். நான் அதுபோன்ற குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருக்கிறேன்’ என்று கூறியிருந்தாா்.
இந்நிலையில், சுட்டுரையில் பிரியங்கா வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நீங்கள் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சாப்பிடாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் இந்த நாட்டின் நிதி அமைச்சா். வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயா்ந்து வருவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீங்கள்தான் இதற்கு தீா்வை கண்டறிய வேண்டும். வெங்காயத்தை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளுக்கு கிலோ ரூ.2 அல்லது ரூ.8 மட்டுமே அளித்து கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் செய்து கடைகளுக்கு எடுத்துச் செல்லும் இடைத்தரகா்கள் நல்ல லாபம் பாா்க்கின்றனா். இதனால், லாபம் கிடைக்காத விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனா். மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்துள்ளது. தற்போது மக்களை வெங்காயம் கண்ணீா் சிந்த வைக்கிறது என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.