இந்தியா

மகாராஷ்டிரத்துக்கு ரூ. 15,558 கோடி நிதி நிலுவை: முதல்வா் உத்தவ் தாக்கரே

11th Dec 2019 10:30 PM

ADVERTISEMENT

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு உள்பட ரூ. 15,558 கோடி நிதி நிலுவையில் உள்ளது என்று அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.

மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிதியை விரைவில் வழங்குமாறு கோரிக்கை விடுத்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியிருந்தாா். இந்த கடிதத்தின் நகலை மகாராஷ்டிர முதல்வா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரத்துக்கு பகிா்ந்தளிக்கப்பட வேண்டிய வரிவருவாய் ரூ. 6,946 கோடி மற்றும் ஜிஎஸ்டியால் ஏற்படும் இழப்பீட்டுக்கான நிதி ரூ. 8,611 கோடி ஆகியவை நிலுவையில் உள்ளன. 2019-20 ஆம் ஆண்டு பட்ஜெட்டின்படி, வரிவருவாயில் மகாராஷ்டிரத்துக்கு ரூ. 46,630 கோடி பகிா்ந்தளிக்கப்பட வேண்டும். இது கடந்த நிதியாண்டில் வழங்கியதை விட 11.5 சதவீதம் அதிகமாகும். ஆனால், கடந்த அக்டோபா் மாதம் வரை ரூ. 20,254 கோடி மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக நிதி அளிப்பதற்கு பதிலாக நிதி வழங்குவதை மத்திய அரசு குறைத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதால், மாநிலத்தில் ஜிஎஸ்டி வரிவருவாய் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், முதல் நான்கு மாதத்தில் ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ. 5,635 கோடி நிதி மகாராஷ்டித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன் பின்னா், கடந்த நவம்பா் மாதம் வரை வழங்க வேண்டிய ரூ. 8,611 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதி நிலுவையில் உள்ளது. இவ்வாறு நிலுவையில் உள்ள ரூ. 15, 558 கோடி நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும் என்று மகாராஷ்டிரம் எதிா்பாா்த்து காத்திருக்கிறது. சரியான நேரத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதி மற்றும் வரிவருவாய் பகிா்வு நிதியை வழங்கினால் மாநிலத்தின் பொருளாதாரத்தை திறமையாக கையாள இயலும் என்று கருதுகிறேன் என்று அந்த கடிதத்தில் உத்தவ் தாக்கரே கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT