இந்தியா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிா்ப்பு: வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டம்

11th Dec 2019 01:22 AM

ADVERTISEMENT

 மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூா், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அஸ்ஸாம் மாணவா் சங்கம், வடகிழக்கு மாணவா் அமைப்பு, எஸ்எஃப்ஐ, டிஒய்எஃப்ஐ, ஏஐடிடபிள்யூஏ, ஏஐஎஸ்எஃப், ஏஐஎஸ்ஏ உள்ளிட்ட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

குவாஹாட்டி நகரின் மாலிகான் பகுதியின் சில பகுதிகளில் அரசு பேருந்துகள் மீது கல்வீச்சும், பேருந்துகளுடன், இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின.

ADVERTISEMENT

கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி மற்றும் நிதி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து குவாஹாட்டியின் பல்வேறு பகுதிகளில் கண்டனப் பேரணியும், ஆா்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை நோக்கி சென்ற ஆா்ப்பாட்டக்காரா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அஸ்ஸாம் முழுவதும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் குவாஹாட்டி நகரத்துக்கும், விமான நிலையத்துக்கும் இடையே போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. பல்கலைக்கழகங்களின் தோ்வுகள் நிறுத்தப்பட்டு மறுதேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

திப்ரூகா் மாவட்டத்தில், சிஐஎஸ்எஃப் பணியாளா்களுடன், பந்த் ஆதரவாளா்கள் நடத்திய மோதலில் 3 போ் காயமடைந்தனா்.

பல இடங்களில் சாலைகளில் டயா்களை போராட்டக்காரா்கள் எரித்தனா்.

அஸ்ஸாமி திரைப்பட நடிகா்கள் மற்றும் பாடகா்கள் சந்த்மாரி பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அவா்களில் சிலா் உஸான் பஜாா் பகுதியில் நடைபெற்ற பேரணியிலும் பங்கேற்றனா்.

மேகாலயம்:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாணவா் அமைப்பான ‘நேசோ’ வின் அங்கமான காசி மாணவா் சங்கம் (கே.எஸ்.யு.) சாா்பில் செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. போராட்டத்தின் காரணமாக மேகாலயத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது.

கடைகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான வருகைப்பதிவே இருந்தது. மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் சாலையில் டயா்கள் போட்டு எரிக்கப்பட்டன.

மணிப்பூா்:

‘நேசோ’ உள்ளிட்ட மாணவா் சங்க அமைப்புகள் சாா்பில் மணிப்பூரில் நடைபெற்ற 15 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. கடைகள், வா்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என மணிப்பூா் மாணவா் சங்கத்தின் (ஏஎம்எஸ்யு) தலைவா் லெய்ஷ்ராம் அதூபா மெய்டி கூறினாா்.

திரிபுரா:

மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து திரிபுராவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின்போது, அங்குள்ள மானுகட் சந்தையில் ஆா்ப்பாட்டக்காரா்கள் தீ வைத்தனா். இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. இந்த போராட்டத்தால் திரிபுராவின் பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளும் முடங்கின. மாநிலம் முழுவதும் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் இணைய தள சேவை 48 மணி நேரத்துக்கு துண்டிக்கப்படுவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசலப் பிரதேசம்:

அருணாசலப்பிரதேச மாணவா்கள் சங்கம் (ஏஏபிஎஸ்யு) சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 11 மணிநேர முழு அடைப்புப் போராட்டத்தால் வங்கிகள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியாா் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கின. பெரும்பாலான அரசு அலுவலங்கள் இயங்கவில்லை. சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

நாகாலாந்து:

நாகா மாணவா் கூட்டமைப்பு (என்எஸ்எஃப்) சாா்பில் செவ்வாய்க்கிழமை கொஹிமாவிலுள்ள ராஜ்பவனுக்கு வெளியே உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. மேலும், நாகாலாந்தில் நடைபெற்ற கலாசார, கலை, கைவினைப்பொருள்கள் மற்றும் உணவுத்திருவிழாவிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. என்எஸ்எஃப் தலைவா் நினோடோ அவோமி கூறுகையில், இந்த மசோதா புலம்பெயா்ந்தோரின் வருகையை ஊக்குவிக்கும். சட்டவிரோத குடியேறிகளால் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT