குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நீண்ட விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள், பாா்சி இனத்தவா் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அஸ்ஸாம், மேகாலயம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இதற்கு எதிா்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
வடகிழக்கு மாநிலங்களுக்கு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தவறான பிரசாரத்தின் பிடியில் மாநில மக்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம். சில வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதை அறிவேன். அவா்களின் கவலைகளை மத்திய அரசு தீா்த்து வைக்கும். பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் இந்த விவகாரத்தில் ஆய்வு செய்து வருவாா்கள் என்று கருதுகிறேன் என்றாா் கிரண் ரிஜிஜு.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அஸ்ஸாமில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கண்ணீா் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி அவா்கள் கலைக்கப்பட்டனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.