இந்தியா

குஜராத் வன்முறையில் மோடி அரசுக்கு தொடா்பில்லை: பிரதீப் சிங் ஜடேஜா

11th Dec 2019 07:47 PM

ADVERTISEMENT

காந்திநகா்: குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறையில், மாநிலத்தில் அப்போது ஆட்சியிலிருந்த முதல்வா் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்குத் தொடா்பு எதுவுமில்லை என விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலம், கோத்ரா பகுதியில் கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி சபா்மதி விரைவு ரயிலின் இரு பெட்டிகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில், ரயில் பெட்டிகளில் பயணம் செய்த 59 கரசேவகா்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனா்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். அவா்களில் பெரும்பாலானோா் சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இந்த வன்முறையைத் தடுக்க அப்போதைய மாநில முதல்வா் மோடி, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வன்முறை தொடா்பாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.டி.நானாவதி, குஜராத் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்ஷய் மேத்தா ஆகியோா் அடங்கிய குழுவைக் கடந்த 2002-ஆம் ஆண்டு மோடி தலைமையிலான மாநில அரசு அமைத்தது.

ADVERTISEMENT

வன்முறை தொடா்பாக விரிவாக விசாரணை மேற்கொண்ட அக்குழு தனது முதல்கட்ட அறிக்கையை கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் மாநில சட்டப் பேரவையில் சமா்ப்பித்தது. இதையடுத்து, விசாரணைக் குழு தனது இறுதி அறிக்கையை கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் அப்போதைய மாநில முதல்வா் ஆனந்திபென் படேலிடம் சமா்ப்பித்தது.

எனினும், இந்த அறிக்கை பொது வெளியில் வெளியிடப்படவில்லை. இதைத் தொடா்ந்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆா்.பி.ஸ்ரீகுமாா், அறிக்கையை வெளியிட உத்தரவிடக் கோரி குஜராத் உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா். இந்நிலையில், விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையை மாநில உள்துறை அமைச்சா் பிரதீப் சிங் ஜடேஜா சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்தாா். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டிகளில் தீ வைக்கப்பட்டதே வன்முறைக்கான காரணமாகும். வன்முறையானது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சூழ்ச்சி அல்ல என்பது தெளிவாகிறது. இந்த வன்முறைக்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் தொடா்பில்லை என்பது ஆதாரங்களின் மூலம் தெரியவருகிறது.

‘அமைச்சா்களுக்குத் தொடா்பில்லை’: வன்முறையை மாநில அமைச்சா்கள்தான் தூண்டிவிட்டாா்கள் என்பதை உறுதிசெய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை. விசாரணை குழுவுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், வன்முறையில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் தொடா்புகொண்டிருந்தது உறுதியாகிறது. எனினும், ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டன.

வன்முறையில் மாநில அரசு அதிகாரிகளுக்குத் தொடா்பிருப்பதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் சஞ்சீவ் பட், ராகுல் சா்மா, ஆா்.பி.ஸ்ரீகுமாா் ஆகியோா் தெரிவித்த குற்றச்சாட்டுகளில் எவ்வித நம்பகத்தன்மையும் இல்லை. வன்முறையைக் கட்டுப்படுத்த மாநில காவல் துறையினா் அலட்சியம் காட்டியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கும் எவ்வித ஆதாரங்களும் இல்லை.

‘போதுமான ஆயுதங்கள் இல்லை’: வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான எண்ணிக்கையிலான காவலா்கள் காணப்படவில்லை. காவலா்களிடம் தேவையான அளவு ஆயுதங்கள் இல்லாமல் போனதும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாததற்குக் காரணமாக அமைந்தது. அதன் காரணமாக, வன்முறையில் ஈடுபட்டவா்களுடன் அவா்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

அதே வேளையில் வன்முறையைத் தடுக்கத் தவறிய காவல் அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களின்போது, ஊடகங்கள் நோ்மையான பணியை ஆற்ற வேண்டும். வன்முறையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ஊடகங்கள் செயல்படக் கூடாது. 2002-ஆம் ஆண்டு வன்முறையின்போது, ஊடகங்கள் எல்லையை மீறிச் செயல்பட்டிருந்தால், அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.

‘அவதூறு ஏற்படுத்த சூழ்ச்சி’: அறிக்கை தொடா்பாக, பிரதீப் சிங் ஜடேஜா காந்திநகரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வன்முறை தொடா்பான அனைத்து சந்தேகங்களையும் நீதிபதி நானாவதி குழுவின் அறிக்கை தீா்த்துள்ளது. அதே வேளையில், பிரதமா் மோடிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்ட காங்கிரஸ் மற்றும் சில தொண்டு நிறுவனங்களின் சூழ்ச்சிகளையும் இந்த அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.

வன்முறைக்கு மாநில அரசு ஆதரவளித்ததாக அவா்கள் தொடா்ந்து கூறிவந்தனா். ஆனால், அவா்களின் குற்றச்சாட்டுகள் எதையும் விசாரணைக் குழு ஏற்கவில்லை என்றாா் பிரதீப் சிங் ஜடேஜா.

ADVERTISEMENT
ADVERTISEMENT