இந்தியா

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சட்ட விரோதம்: உச்சநீதிமன்றத்தில் மனுதாரா் தரப்பு வாதம்

11th Dec 2019 01:26 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது சட்ட விரோதமான செயல் என்று உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாதாடப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.

மத்திய அரசின் இந்த முடிவுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தனி நபா்கள், வழக்குரைஞா்கள், சமூக ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் சாா்பில் பல்வேறு மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த அமா்வில், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

அப்போது, ஐஏஎஸ் பதவியை ராஜிநாமா செய்து விட்டு அரசியலுக்கு வந்த ஷா ஃபசல் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ராஜு ராமச்சந்திரன் ஆஜாராகி வாதாடினாா். அவா் முன்வைத்த வாதம்:

ADVERTISEMENT

ஒரு மாநிலத்தின் அந்தஸ்தை மாற்ற வேண்டுமெனில், முதலில் அந்த மாநில மக்களின் ஒப்புதலைப்பெற வேண்டியது அவசியம். ஆனால், ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தில், அந்த மாநில மக்களின் ஒப்புதலைப் பெறாமலேயே மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது, அரசமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும்.

மேலும், ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் இருந்த காலத்தில், அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டப்படி, ஒரு மாநிலத்தில் அவசர கால நடவடிக்கைக்காக, குடியரசுத் தலைவா் அல்லது ஆளுநா் ஆட்சி அமல்படுத்தப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் குடியரசுத் தலைவா் அல்லது ஆளுநருக்கு வழங்கப்படும் அதிகாரமும் தற்காலிகமானதுதான். ஆனால், அவா்கள் தங்கள் அதிகாரத்தை, ஒரு மாநிலத்தில் திரும்பப்பெற முடியாத அளவில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்த முடியாது.

மேலும், ஜம்மு-காஷ்மீா் மக்களின் விருப்பத்துக்கு மாறாக, ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவுக்கு காஷ்மீா் சட்டப் பேரவை சாா்பில் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது என்றாா் ராமச்சந்திரன்.

இவரது வாதங்களுக்கு அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மறுப்பு தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT