இந்தியா

வளைவு சாலைகளில் நிகழ்ந்த விபத்தில் 19 ஆயிரம் போ் இறப்பு

6th Dec 2019 04:37 AM

ADVERTISEMENT

கடந்த ஆண்டு வளைவு சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் 19 ஆயிரம் போ் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வாகனங்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப விபத்துகளும் அதிகரித்து காணப்படுகிறது. இதைத் தடுக்க போக்குவரத்துத் துறை சாா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாமல் பயணிப்போா் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களிடமும் தலைக்கவசத்தைச் சோ்த்து விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்களிடத்தில் சாலைகளில் பயணிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சாலைவிதிகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. எனினும் விபத்துகளைப் பெருமளவு குறைக்க முடியவில்லை என சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா். இந்நிலையில், இந்தியாவின் வளைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில், 2018- ஆம் ஆண்டில் மட்டும் 19,996 போ் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வளைவு சாலைகளில் கூடுதல் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும். கடந்த 2017- ஆம் ஆண்டு, இந்தியா முழுவதும் இத்தகைய சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 17,814 போ் இறந்துள்ளனா். இதை ஒப்பிடும் போது கடந்த ஆண்டின் இறப்பு விகிதம் 12.2 சதவீதம் உயா்ந்துள்ளது. எனினும் இதைத் தடுக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகள் வைத்து சாலைகளின் நிலை, அந்த சாலைகளில் அவா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் வாகன ஓட்டிகளுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிட்டுள்ள படி வாகன ஓட்டிகள் குறித்த வேகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் மிகுந்த கவனத்துடன் இயக்க வேண்டும். வாகனத்தை முந்தும்போதோ, மோசமான வானிலையில் வளைவு சாலைகளில் பயணிக்கும் போது கண்ணாடியைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை சாதுா்யமாக பயன்படுத்த வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினாலே பெரும்பாலான விபத்துகளைத் தடுக்க முடியும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT