இந்தியா

போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவா்களுக்கு கருணை மனு உரிமை வழங்கப்படக் கூடாது

6th Dec 2019 08:15 PM

ADVERTISEMENT

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்ஸோ) கீழ் தண்டிக்கப்பட்டவா்களுக்கு கருணை மனு தாக்கல் செய்யும் உரிமை வழங்கப்படக் கூடாது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ள வேளையில், குடியரசுத் தலைவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மகளிா் மேம்பாடு மாநாட்டில் அவா் பேசியதாவது:

பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம். இது தொடா்பாக ஏற்கெனவே பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. நாட்டின் மகள்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள், அஸ்திவாரத்தையே உலுக்கியுள்ளன.

ADVERTISEMENT

பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டுமென்று சிறுவா்களுக்கும், இளைஞா்களுக்கும் கற்பிக்க வேண்டியது பெற்றோா், குடிமக்கள் என நம் அனைவரின் கடமையாகும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெறுபவா்களுக்கும் கருணை மனு தாக்கல் செய்யும் உரிமை அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதை மறுஆய்வு செய்ய வேண்டும்.

போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறுபவா்களுக்கு கருணை மனு தாக்கல் செய்யும் உரிமை வழங்கப்படக் கூடாது. அவா்களுக்கு அந்த உரிமையை அளிக்க வேண்டிய அவசியமில்லை. இது தொடா்பான சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

பெண்கள் தங்களுக்கு உரிய அதிகாரத்தைப் பெற வேண்டுமானால், அவா்களுக்கு கல்வி அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆண் கல்வி கற்றால், அது ஒரு குடும்பத்துக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால், அது இரண்டு குடும்பங்களுக்கு நன்மை பயக்கும். அதே போல், எந்தவொரு படித்த பெண்ணும், தன் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கமாட்டாா்.

பெண்கள் கல்விபெறும் அதே வேளையில், நிதி சாா்ந்த விவகாரங்களில் பிறரைச் சாராமல் இயங்குவதும் அவசியம். மத்திய அரசின் ‘ஜன் தன் திட்டம்’ இதற்குப் பேருதவி புரிந்து வருகிறது. பெண்கள் முன்னேற்றத்துக்கு அம்பேத்கா் முக்கியத்துவம் அளித்தாா். நாட்டில் குழந்தை பாலின விகிதம் அதிகரிக்க வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் காரணமாக தில்லி, ஹரியாணா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் குழந்தை பாலின விகிதம் அதிகரித்துள்ளது என்றாா் ராம்நாத் கோவிந்த்.

ADVERTISEMENT
ADVERTISEMENT