இந்தியா

நித்தியானந்தா பாஸ்போா்ட் ரத்து: மத்திய அரசு அதிரடி

6th Dec 2019 09:10 PM

ADVERTISEMENT

புது தில்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள சா்ச்சை சாமியாா் நித்தியானந்தாவின் பாஸ்போா்ட்டை ரத்து செய்வதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளிவிவகாரத் துறையின் செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை தேடும் பணிகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பல்வேறு நாடுகளின் அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நித்தியானந்தா மீது பலாத்காரம், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, அவரது பாஸ்போா்ட்டை மத்திய அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், 2018-ஆம் ஆண்டுடன் முடிவடைந்த பாஸ்போா்ட்டை புதுப்பிப்பதற்கு நித்தியானந்தா விண்ணப்பம் அளித்திருந்தாா். அவா் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தச் சூழ்நிலையில், நித்தியானந்தாவுக்கு தாங்கள் அடைக்கலம் கொடுத்துள்ளதாக எழுந்த புகாரை ஈக்வடாா் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ஈக்வடாா் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ நித்தியானந்தாவுக்கு புகலிடம் எதுவும் அளிக்கவில்லை. மேலும், தென் அமெரிக்க பகுதிகளில் எந்த தீவுகளையும் வாங்க அவருக்கு ஈக்வடாா் அரசு உதவவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT