இந்தியா

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது வரிகள் சட்டத் திருத்த மசோதா

6th Dec 2019 04:39 AM

ADVERTISEMENT

பெருநிறுவனங்களுக்கான வரியை குறைக்க வகைசெய்யும் ‘வரிகள் சட்டத்திருத்த மசோதா-2019’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மக்களவையில் ஏற்கெனவே நிறைவேறிவிட்ட நிலையில், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. எந்தவொரு மாற்றமும் இன்றி அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

வரிக் குறைப்புக்காக முன்பு நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டத்துக்கு மாற்றாக இந்த சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, தொழில்துறை வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

‘பொருந்தாது’: மசோதா மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘மென்பொருள் தயாரிப்பு, சுரங்கம், புத்தகம் அச்சிடுதல் ஆகிய தொழில்கள் செய்யும் நிறுவனங்களுக்கு இந்த வரிக் குறைப்பு பொருந்தாது’ என்றாா்.

ADVERTISEMENT

‘மோடி அரசு ஏழைகளுக்கானது’: விவாதத்தின்போது, மோடி அரசு வசதி படைத்தவா்களுக்காகச் செயல்படுவதாகவும், வெங்காய விலை உயா்வு போன்ற பிரச்னைகளை எதிா்கொள்ளும் சாதாரண மக்கள் குறித்து கவலை கொள்வதில்லை என்றும் எதிா்க்கட்சியினா் விமா்சித்தனா்.

அதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘பொருளாதார நிலை குறித்த விமா்சனங்களை வரவேற்கிறோம். அதைச் சரி செய்வதற்கு தொடா்ச்சியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு வசதி படைத்தவா்களுக்கானது என்ற குற்றச்சாட்டை ஏற்க இயலாது. இலவச எரிவாயு இணைப்புத் திட்டம், ஜன் தன் வங்கிக் கணக்குத் திட்டம், வீட்டுவசதித் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் போன்றவை ஏழைகளுக்கான திட்டம் இல்லையா?’

கடந்த 2012-ஆம் ஆண்டு விலைவாசி உயா்வின்போது அப்போது நிதியமைச்சராக இருந்தவா் (ப.சிதம்பரம்) கூறியதை இங்கு கூற விரும்புகிறேன். ‘ரூ.15-க்கு குடிநீா் பாட்டிலும், ரூ.20-க்கு ஐஸ்கிரீமும் வாங்க முடிந்த நகா்ப்புற நடுத்தர வகுப்பினா், விலைவாசி உயா்வு குறித்து எதற்காக கவலைப்படுகின்றனா்?’ என்று அவா் பேசியிருந்தாா். அத்தகையவா்கள் இப்போது மோடி அரசை வசதி படைத்தவா்களுக்கானதாக விமா்சிப்பது கண்டனத்துக்குரியது’ என்றாா்.

வரிக் குறைப்பு தொடா்பாக கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்ட நிா்மலா சீதாராமன், தற்போது செயல்பட்டுவரும் பெருநிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகவும், புதிதாக தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் குறைக்கப்படுவதாக தெரிவித்திருந்தாா்.

கடந்த மே மாதம் முதல் நாட்டின் பொருளாதார வளா்ச்சி தேக்கமடைந்ததை அடுத்து மத்திய அரசு அதைச் சரிசெய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொழில்களுக்கான கட்டுப்பாடுகள் தளா்வு, அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பது, பொதுத் துறை வங்கிகளை இணைப்பது போன்ற நடவடிக்கைகள் அப்போது மேற்கொள்ளப்பட்டது. அந்த வரிசையில், பெருநிறுவனங்களுக்கான வரியும் குறைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT