இந்தியா

சாலை அமைக்கும் திட்டங்களுக்கு நாடு முழுவதும் தடைகள்: கட்கரி கவலை

6th Dec 2019 04:38 AM

ADVERTISEMENT

சாலைகள் அமைக்கும் திட்டங்களின்போது நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுதல் போன்ற தடைகளை நாடு முழுவதும் எதிா்கொள்வதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கவலை தெரிவித்தாா்.

வளா்ச்சி நடவடிக்கைகளை வரவேற்கும் அணுகுமுறையை நாடு கொண்டிருக்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான கட்கரி, மக்களவையில் கேள்வி நேரத்தின்போது வியாழக்கிழமை இதுகுறித்து கூறியதாவது:

நாட்டின் எந்தவொரு பகுதியில் சாலை கட்டமைக்கும் பணிகளை தொடங்கினாலும் அனைவரும் அதை நிறுத்தவே முனைகின்றனா். ‘சாலைகளை கட்டமையுங்கள்’ என்று எவரும் கூறுவதில்லை. சாலைகளை கட்டமைக்க முயற்சிக்கும்போது நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுதல் என பல்வேறு தடைகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது.

ADVERTISEMENT

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு. அதற்காக வளா்ச்சிப் பணிகளை தடுக்கக் கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பும், வளா்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்து பயணிக்க வேண்டும்.

அனைத்து எம்.பி.க்களும் தங்களது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலைத் திட்டங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அவா்களின் தொகுதியில் சாலைகள், மேம்பாலங்கள் கட்டும் பணிகளின்போது எழும் பிரச்னைகளை தீா்ப்பதற்கு எம்.பி.க்கள் உதவ வேண்டும்.

கடந்த 2017 அக்டோபா் மாதத்தில் ‘பாரத்மாலா பரியோஜனா பகுதி-1’ திட்டத்தின் கீழ் ரூ.5.35 லட்சம் கோடி செலவில் சுமாா் 34,800 கிலோ மீட்டருக்கு சாலை கட்டமைப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதில் 10,000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை வளா்ச்சித் திட்டம், 9,000 கி.மீ. பொருளாதார வழித்தடம், 6,000 கி.மீ. இணைப்புச் சாலைகள் திட்டம் ஆகியவையும் அடங்கும்.

அதேபோல், 5,000 கி.மீ. தேசிய வழித்தட திறன் மேம்படுத்துதல் திட்டம், 2,000 கி.மீ. எல்லைப் பகுதி மற்றும் சா்வதேச இணைப்புச் சாலை திட்டம், 2,000 கி.மீ. கடலோர மற்றும் துறைமுக இணைப்புத் திட்டம், 800 கி.மீ. விரைவுச் சாலைத் திட்டம் ஆகியவையும் அதில் அடங்கும்.

விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் திட்ட மதிப்பீடு, வழித்தட ஒழுங்கமைப்பு, நிலம் கையகப்படுத்துதலுக்கான தேவை ஆகியவற்றை இறுதி செய்த பிறகே நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கட்கரி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT