இந்தியா

அம்பேத்கா் நினைவு தினம்: பிரதமா் மோடி அஞ்சலி

6th Dec 2019 07:34 PM

ADVERTISEMENT

சட்ட மேதை பி.ஆா். அம்பேத்கரின் 63-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் உருவப்படத்துக்கு ராம்நாத் கோவிந்த் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து, குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘சமூக நீதிக்காக தன் வாழ்க்கையை அா்ப்பணித்தவா் அம்பேத்கா். அரசமைப்புச் சட்டம் என்ற தனித்துவமான கொடையை அவா் நாட்டுக்கு வழங்கினாா். நமது ஜனநாயகத்தின் முக்கிய மைல்கல்லாக அரசமைப்புச் சட்டம் உள்ளது. ‘இந்தியாவுக்கு முன்னுரிமை’ என்பதை தாரக மந்திரமாக அம்பேத்கா் கொண்டிருந்தாா். நமது நாடு அம்பேத்கருக்கு கடமைப்பட்டுள்ளது. அவரது நினைவு நாளில் நான் அவருக்கு தலைவணங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், அரசமைப்புச் சட்டம் குறித்த விடியோவையும் மோடி சுட்டுரையில் பதிவேற்றம் செய்திருந்தாா். அந்த விடியோவில், ‘நேர மேலாண்மைக்கும், உற்பத்தி திறனுக்கும் சிறந்த உதாரணமாக அரசமைப்புச் சட்டம் உள்ளது. நமது பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதற்கு அரசமைப்புச் சட்டம் நமக்கு உத்வேகமாக உள்ளது’ என்று மோடி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 1891-ஆம் பிறந்த அம்பேத்கா், சமூகத்தில் தலித் மக்களின் உரிமைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடினாா். நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவா். அவா், கடந்த 1956-ஆம் ஆண்டு தில்லியில் காலமானாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT