இந்தியா

மொழி எதிர்கொள்ளும் ஆபத்துகள்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேச்சு

3rd Dec 2019 04:38 AM

ADVERTISEMENT

 

கொச்சி: கணினி வரவால் நினைவுத் திறன் பாதிப்பு, ஆங்கிலக் கலப்பு உள்ளிட்டவையே மொழி எதிர்கொள்ளும் ஆபத்துகள் என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசினார்.

கேரள மாநிலம், கொச்சியில் 23-ஆவது சர்வதேச புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், மறைந்த பத்திரிகையாளர் லீலா மேனன் நினைவாக பத்திரிகை, ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை (டிசம்பர் 2) நடைபெற்றது.

புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் டி.சதீசன் வரவேற்றார். கேரள உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.கோபிநாதன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பத்திரிகை, ஊடகவியலாளர்களுக்கு விருதுகளை வழங்கி தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியதாவது:

ADVERTISEMENT

தினமணி நாளிதழில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றிய பெரும் சாதனையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவான் எனப் போற்றப்படும் ஏ.என்.சிவராமன் பிறந்த எர்ணாகுளம் மண்ணில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றுப் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மொழி ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளத்தை வழங்குகிறது. ஒரு மனிதன் ஜாதி இல்லாமலும் மதம் இல்லாமலும் இருக்க முடியும். ஆனால், மொழி இல்லாமல் இருக்க முடியாது.

முதலில் மனிதன், தான் கற்றுக்கொண்ட விஷயங்களை, தன் எண்ணங்களைத் தனது நினைவில் வைத்திருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவற்றை வழங்கி வந்தான்.

பின்னர் எழுத்துகளும், மொழிகளும் உருவாகின. அதன் மூலம் இலக்கியங்கள் உருவாகின. ஆனால், இன்றைய கணினியுகம் நம்மை மீண்டும் எழுத்து இல்லாத காலத்துக்கே அழைத்துச் செல்கிறது.

சாதாரண கூட்டல், பெருக்கல் கணக்குகளுக்கே கருவிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நினைவுத்திறன் இல்லாமல் ஒரு புதிய தலைமுறை உருவாகி வருவது மனித சமுதாயம் எதிர்கொள்ளும் முதல் ஆபத்து. அதேபோல மொழிகளின் அழிவுக்கும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியே காரணமாகியிருக்கிறது.

ஆங்கிலத்தின் வரவால் ஏனைய மொழிகள் கலப்பிற்கு ஆளாகியுள்ளன. ஆங்கிலக் கலப்பால் அழியத் தொடங்கிய மொழிகள் தற்போது இலக்கணப் பயன்பாடு இல்லாததால் இன்னும் வேகமாக அழிந்து வருகின்றன.

இலக்கணம் சார்ந்த மொழிக் கட்டமைப்பு இல்லாவிட்டால் ஒரு மொழி பேச்சு நிலையிலும், எழுத்து நிலையிலும் பொதுவான தனது கட்டமைப்பை இழந்து நாளடைவில் சிதைந்துவிடும். எந்தவித இலக்கணத்துக்கும் உட்படாமல் இருப்பதால்தான் தொன்மைக் கால இலக்கியங்கள்போல மக்கள் மனதில் இடம்பிடிக்க தற்போதைய இலக்கியங்கள் தவறிவிடுகின்றன. நினைவில் நிற்காத தற்போதைய இலக்கியங்களால் மொழிக்குப் பயனில்லை. மொழி மறையும்போது அத்துடன் சேர்ந்து நமது கலாசாரமும், பண்பாடும் மறைகின்றன.

மொழி உயிர்ப்புடன் இருப்பதற்கு வாசகனின் நினைவுத் திறன் மிகவும் முக்கியம். வாசகனின் நினைவில் தங்கும் வகையிலான இலக்கியமும் படைப்புகளைத் தங்கள் நினைவில் பதிவேற்றம் செய்து ரசித்து மகிழும் வாசகர்களும் இருந்தால்தான் மொழி உயிர்ப்புடன் உலவும்.

அடுத்த தலைமுறைக்கு வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டு செல்வதால் மட்டுமே நாம் மொழியைப் பாதுகாக்க முடியும். இதுபோன்ற புத்தக கண்காட்சிகள் மொழியின் வளர்ச்சிக்கு கட்டாயம் தேவைப்படுகின்றன என்றார்.

விழாவில் எர்ணாகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஜே.வினோத், புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்புக் குழு செயலர் பிரதீப் நம்பியார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறந்த பத்திரிகையாளர், ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் அனு ஆபிரகாம், பைஜு கொடுவள்ளி, அனிதா மேரி, அபிலாஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. மூத்த பத்திரிகையாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மாத்ருபூமி நாளிதழின் முன்னாள் இணை ஆசிரியரும், ஜன்மபூமி நாளிதழின் துணை ஆசிரியருமான பி.பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT