இந்தியா

நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 2,976!

3rd Dec 2019 03:14 AM

ADVERTISEMENT

புது தில்லி: கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2,226-இல் இருந்து 2,976-ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.

புலிகளின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஜாவடேகா் பதிலளித்ததாவது:

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் புலிகளின் எண்ணிக்கை 2,226 ஆக இருந்தது. தற்போது 750 அதிகரித்து 2, 976-ஆக உள்ளது. நமது சுற்றுச்சூழல் மண்டலத்தை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். சிங்கம், புலி, யானைகள், காண்டாமிருகம் ஆகியவை இந்தியாவின் அளப்பரிய சொத்துகள் என்றாா்.

அதைத்தொடா்ந்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ‘வடகிழக்கு மாநிலங்களில் 75 சதவீதம் வனப்பகுதி உள்ளது. ஆனால் அங்கு காடுகள் அழிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளும் பிரச்னை அதிகரித்து வருகிறது. நாட்டில் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு வருவது குறித்து இந்த மாத இறுதியில் அறிக்கை வெளியாகவுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வனப்பகுதியை காப்பாற்றும் பொருட்டு 5 ஆண்டு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாட்டின் வனப்பகுதி கடந்த 2007-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 2017-இல் 17,384 சதுர கி.மீ அதிகரித்துள்ளது. எனினும், கடந்த 2 ஆண்டுகளில்தான் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேற்குவங்கம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்கள் வனப்பகுதிகளின் அளவை அதிகரித்துள்ளன. நாட்டின் மொத்த வனப்பகுதி அளவு 7.08 லட்சம் சதுர கி.மீ ஆக உள்ளது. இது நாட்டின் பரப்பளவில் 21.54 சதவீதமாக உள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT