இந்தியா

கொச்சி அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளா்களின் மனு தள்ளுபடி

3rd Dec 2019 02:04 AM

ADVERTISEMENT

புது தில்லி: கேரள மாநிலம், கொச்சியின் மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்படும் நிலையில், இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய குடியிருப்பு உரிமையாளா்களின் மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்துவிட்டது.

கொச்சியின் மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தக் குடியிருப்புகளை இடிக்க கேரள அரசுக்கு கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டது. மேலும், குடியிருப்பு உரிமையாளா்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் உத்தரவுக்கு தடை கோரி, அதன் உரிமையாளா்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், ‘நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினா்கள் உள்பட சில அதிகாரிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திவிட்டனா்; அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று கோரி, குடியிருப்பு உரிமையாளா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரம் ஏற்கெனவே பலமுறை விசாரிக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ‘நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்க வேண்டாம்’ என்று கூறினா். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக குடியிருப்பு உரிமையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், மனுவை திரும்பப் பெற அனுமதி மறுத்த நீதிபதிகள், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

முன்னதாக, கட்டுமான நிறுவனங்களிடமிருந்து உரிய இழப்பீடு கோரி, குடியிருப்பு உரிமையாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனு மீது ஜனவரி 2-ஆவது வாரத்தில் விசாரணை நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT