இந்தியா

ஹைதராபாத்தில் 61 அடி உயரத்தில் பிரமிக்க வைக்கும் விநாயகர் சிலை!

30th Aug 2019 12:04 PM | Muthumari

ADVERTISEMENT

 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இங்கு ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி விழாவின் போதும், பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுவது வழக்கம். ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு விடும். 

நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டாலும், இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு சிறப்பு இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு 57 அடி உயரத்தில் சிலை உருவாக்கப்ட்டதுடன், 600 கிலோ எடை அளவில் பிரம்மாண்ட லட்டு ஒன்று விநாயகருக்கு படைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி விநாயகர் சதுர்ச்சி விழா வெகு சிறப்பாக கொண்டப்படுவதையொட்டி, கைதராபாத் விநாயகர் கோவிலில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக 61 அடி உயரத்தில் துவாதசி ஆதித்ய மஹா கணபதி அவதாரத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஜூன் மாதமே தொடங்கப்பட்ட நிலையில், தற்போது பணிகள் முடிவடைந்து இறுதி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலை 12 தலைகளுடன், 24 கைகளுடன், 7 குதிரைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1954ம் ஆண்டு முதல் இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அந்த ஆண்டில் 1 அடி உயரத்தில் விநாயகர் சிலை செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 61 அடி உயரத்தில் விநாயகர் சிலை வடிவைமைக்கப்பட்டுள்ளது என்று கணேஷ் உத்சவ சமிட்டியின் தலைவர் சுதிராஜ் தெரிவித்தார். 

ஒவ்வொரு ஆண்டும் சதுர்த்தி விழா அன்று இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கோவிலைச் சுற்றி 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

முன்னதாக, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் நாடு முழுவதுமே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT