இந்தியா

எந்தெந்த பொதுத்துறை வங்கிகள் இணைகின்றன? - அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

30th Aug 2019 05:29 PM | Muthumari

ADVERTISEMENT

வாராக்கடன்களின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது என்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக் கடன் குறைந்துள்ளது என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது: 

தொழில்துறையை ஊக்குவிக்க ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. தொழில்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். வங்கித்துறையிலும் சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

8 பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு இணையாக வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து உள்ளன. வங்கிக் கடனை கட்டி முடித்த 15 நாட்களுக்குள் கடன் பத்திரங்கள் திருப்பித் தரப்படும். கடன் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வங்கிகள் அறிக்கை தந்துள்ளன. 

ADVERTISEMENT

இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த சில ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக வளர்த்து எடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். 

பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பலவேறு பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுகின்றன. 

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகள் இணைக்கப்படுகின்றன.  ரூ.17.5 லட்சம் கோடி ரூபாய் வணிகத்துடன் எஸ்பிஐக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவாகும்.

இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியுடன்  இணைக்கப்படுகிறது. இது நாட்டின் ஏழாவது பொதுத்துறை வங்கியாக இது இருக்கும். 

யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகிய மூன்றும் இணைக்கப்படுகிறது. இந்த வங்கிகளை இணைப்பதன் மூலம் பெருமளவு வாராக் கடன் குறையும். மேலும், நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய வங்கியாக இது மாறும். 

கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுவதன் மூலம் ரூ.15.20 லட்சம் கோடி வர்த்தகத்துடன் நான்காவது பெரிய பொதுத்துறை வங்கியாக இது மாறும். 

வாராக்கடன்களின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. ரூ75 ஆயிரம் கோடி அளவுக்கு வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு லட்சம் கோடி அளவுக்கு வாராக் கடன் குறைந்துள்ளது. மேலும், ரூ. 250 கோடி கடன்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும்.  

கடந்த மார்ச் 2019 காலாண்டில் மொத்த 18 வங்கியில் 6 வங்கிகள் மட்டுமே லாபம் ஈட்டின. தற்போது 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன. வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை. 

2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இன்றைய அறிவிப்புக்கு பிறகு நாட்டில் 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். வங்கிகள் இணைக்கப்படும் பட்சத்தில், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கொடுக்கும் கடன் அளவு அதிகரிக்கும். 

நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கிகளின் உயர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

சில்லறை வணிகத்துக்கான கடன் வழங்குவது 21% அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க கடன் வசதி வழங்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT