முகநூலில் பொய்யான பதிவுகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளை பதிவிட்டதற்காக, வெளிமாநிலங்களில் பணிபுரியும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையச் சேவை துண்டிக்கப்பட்டது.
எனினும், காஷ்மீர் நிலவரம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை யாரேனும் பதிவு செய்கிறார்களா என்று காவல் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அவ்வாறு கண்காணிக்கும் போது,முகநூலில் சில பொய்யான பதிவுகள் வெளியாகியிருப்பதை ரஜெளரி மாவட்ட காவல் துறையினர் கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக அந்த மாவட்ட உயரதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களைச் சேர்ந்த ஜாகீர் செளதரி, ஜாகீர் ஷா புகாரி, இம்ரான் காஸி, நாஷிக் ஹுசைன், சர்தார் தாரிக் கான் ஆகிய 5 பேரும் வெளி மாநிலங்களில் தங்கி பணிபுரிகின்றனர். அவர்கள் காஷ்மீரின் நிலவரம் குறித்து பொய்யான பதிவுகளை முகநூலில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், காஷ்மீரின் அமைதியை குலைக்கும் வகையில், வன்முறையைத் தூண்டும் கருத்துகளையும் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.
இந்தக் காரணங்களுக்காக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்கும் வகையில், அவர்களது கடவுச்சீட்டுகளை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி கூறினார்.
வெளிமாநிலங்களில் தங்கி பணிபுரியும் ஜம்மு-காஷ்மீர் மக்கள், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சமூக வலைதளங்களில் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அந்த அதிகாரி வலியுறுத்தினார்.