காடு வளர்ப்பு, காட்டுத் தீயைத் தடுப்பது, பல்லுயிர்ப் பெருக்கத்தை நிர்வகிப்பது மண் பாதுகாப்பு உள்ளிட்ட பசுமை செயல்பாடுகளுக்கு தமிழகம் உள்பட 27 மாநிலங்களுக்கு ரூ. 47 ஆயிரம் கோடி நிதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வியாழக்கிழமை வழங்கியது.
இது தொடர்பாக தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நிதியை வனக்காடுகள் வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையகம் (சிஎம்பிஏ) அமைப்பின் கீழ் மாநிலங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாற்றம் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வழங்கினார்.
இதில், தமிழகத்திற்கு ரூ.113.42 கோடி, கேரளத்திற்கு 81.59 கோடி, கர்நாடகத்திற்கு ரூ.1,350.37 கோடி, ஆந்திரத்திற்கு ரூ.1734.81 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.3,110.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:
இந்த நிதியானது மாநில பட்ஜெட்டில் காடு வளர்ப்புக்குக் கூடுதலாக அமையும். அனைத்து மாநிலங்களும் இந்த நிதியை வனம் மற்றும் மரங்கள் வளையத்தை அதிகரிப்பதற்கான இலக்கை எட்டும் பொருட்டு வன வளர்ப்பு செயல்பாடுகளில் பயன்படுத்தும். எனினும், இந்த சிஏஎம்பிஏ நிதியை ஊதியம், பயணப் படி, மருத்துவச் செலவுகள் போன்வற்றுக்கு பயன்படுத்த முடியாது.
காடு வளர்ப்பது, வனவிலங்குகளை மேலாண்மை செய்வது, காட்டுத் தீயைத் தடுப்பது, மண் மற்றும் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கிராமங்கள் விருப்பத்தின் பேரில் இடம் பெயரச் செய்வது, உயிரியல் வளங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை மேலாண்மை செய்வது, காடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்வது, சிஎம்பிஏ பணிகளின் கண்காணிப்பு உள்ளிட்டவற்றுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும். நாட்டின் வன வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு மத்திய வன அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.
சிஎம்பிஏ அமைப்பின் கீழ் ரூ.47,436 கோடி நிதியானது தமிழகம், ஒடிஸா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், தெலங்கானா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், குஜராத், கர்நாடகம், ஹரியாணா, பஞ்சாப், அஸ்ஸாம், பிகார், மணிப்பூர், கோவா, மேற்கு வங்கம், மிúஸாரம், திரிபுரா, மேகாலயம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ மற்றும் மாநில வனத் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.