ஹிமாசலப் பிரதேசத்தில் திருமணம் மூலமாக மதமாற்றம் மேற்கொள்வது, கட்டாய மதமாற்றம் செய்வது ஆகியவற்றுக்கு எதிராக மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவையில் 2019ஆம் ஆண்டைய ஹிமாசலப் பிரதேச மத சுதந்திர மசோதா எனும் மசோதாவை அந்த மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்குர் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார். 2006ஆம் ஆண்டைய ஹிமாசலப் பிரதேச மதச் சுதந்திர சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா, ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவையில் வரும் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மசோதாவில், திருமணம் மூலம் மதமாற்றம் செய்வது, கட்டாயமாக, மோசடி மூலம் மதமாற்றம் ஆகியவற்றுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும், மதமாற விரும்புவோர், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு ஒரு மாதத்துக்கு முன்பு தெரியப்படுத்த வேண்டும், அதில் தமது விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறுவதாக அவர் தெரிவிக்க வேண்டும், மதமாற்றச் சடங்கை நடத்தி வைப்பவரும், ஒரு மாதத்துக்கு முன்பு அதை தெரியப்படுத்த வேண்டும்.
அதேநேரத்தில், தாய் மதத்துக்கு மீண்டும் திரும்புவோருக்கு மேற்கண்ட நிபந்தனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா, ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுமெனில், மத மாற்றம் தொடர்பான சதியில் ஈடுபடுவோர், அதை தூண்டுவோருக்கு ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஒருவேளை தலித், பெண்கள் அல்லது சிறார்கள் மேற்கண்ட வழிகளில் மதமாற்றம் செய்யப்பட்டால், அதில் தொடர்புடையோருக்கு 2 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
மத மாற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு நடைபெறும் திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்படும்.