ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை சென்றார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையடுத்து, முன்னெச்சரிக்கையாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தாரிகாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதுடன், அங்கு பிற மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறி, ஸ்ரீநகருக்கு கடந்த 9ஆம் தேதி சீதாராம் யெச்சூரி சென்றார். ஆனால் அவரை மாநில அரசு நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இந்நிலையில், தாரிகாமியை நேரில் ஆஜர்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீதாராம் யெச்சூரி மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜம்மு-காஷ்மீர் சென்று தாரிகாமியை சந்திப்பதற்கு யெச்சூரிக்கு அனுமதியளித்தது.
இதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை பிற்பகல் சென்றார். அங்கு அவர் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தாரிகாமியின் இல்லத்துக்கு சென்று வீட்டுக் காவலில் இருக்கும் அவரைச் சந்தித்தார். சுமார் 3 மணி நேரம் வரையிலும் தாரிகாமியுடன் சீதாராம் யெச்சூரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீர் பயணத்தின்போது வேறு பணிகளில் யெச்சூரி ஈடுபடக் கூடாது, அந்தப் பயணம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தனது பயணம் முடிவடைந்ததும் உச்சநீதிமன்றத்தில் யெச்சூரி பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.