காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி முழுவதிலும் தொடர்ந்து 25-ஆவது நாளாக வியாழக்கிழமையன்றும் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது.
இதுகுறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டு 24 நாள்கள் கடந்து விட்ட நிலையிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இன்னும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சந்தைகள் மூடப்பட்டும், அரசு போக்குவரத்து செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாலும் பொது வெளியில் மக்களின் நடமாட்டம் மிக குறைவான அளவிலேயே காணப்படுகிறது. இருப்பினும், சில தனியார் வாகனங்கள் நகரின் பல பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. தெருவோரக் கடைகளில் சில இடங்களில் வியாபாரம் நடைபெறுகிறது.
மாநில அரசு பள்ளிகளை திறக்க முழு முயற்சி மேற்கொண்டுள்ள போதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை கருதி தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர்.
அதேபோன்று, அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்துகள் ஓடாததால் பணியாளர்களின் வருகை மிக குறைந்த அளவிலேயே உள்ளன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தொலைத்தொடர்பு மற்றும் அனைத்து இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் தரைவழி தொலைபேசி சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.