தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற கண்கவர் விழாவில் மாற்றுத் திறனாளி வீராங்கனை தீபா மாலிக்குக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது உள்பட பல்வேறு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு அர்ஜுனா, துரோணாச்சார்யா விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆக. 29 ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அப்போது விளையாட்டில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளுக்கு கேல்ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதுகள், தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கம்.
அதன்படி வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் இதற்கான விழா நடைபெற்றது.
நிகழாண்டு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, பாராலிம்பிக் தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். வெளிநாட்டில் பயிற்சி முகாமில் இருந்ததால் புனியா பங்கேற்கவில்லை.
தீபா மாலிக்குக்கு மட்டும் கேல்ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றிருந்தார் தீபா. மேலும் கேல் ரத்னா விருதை பெறும் அதிக வயதான வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ஆசிய குண்டுஎறிதல் தங்க வீரர் தேஜிந்தர் பால் சிங், ஒட்டப்பந்தய வீரர் முகமது அனாஸ் ஆகியோர் அர்ஜுனா விருதுகளை பெற வரவில்லை.
கேல் ரத்னா விருது பெறுவோருக்கு ரூ.7.5 லட்சம் ரொக்கமும், அர்ஜுனா விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் ரொக்கமும் விருதுடன் வழங்கப்படும்.
19 பேருக்கு அர்ஜூனா விருதுகளும், 6 பேருக்கு துரோணாச்சார்யா விருதுகளும், 5 பேருக்கு தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.