ஜம்மு-காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் முதலில் பொதுமக்களின் நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இரண்டாவதாக, சில பகுதிகளில் தரைவழி தொலைபேசி சேவை மற்றும் செல்லிடப் பேசி சேவைகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டன. இதேபோல், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களும் தகுந்த நேரத்தில் விடுதலை செய்யப்படுவார்கள்.
ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகத்துக்கு உதவிகள் செய்வதற்கு பல்வேறு மத்திய குழுக்கள் கடந்த 5ஆம் தேதி முதல் மாநிலத்துக்கு சென்றன. இதேபோல், மேலும் பல மத்தியக் குழுக்கள் ஜம்மு-காஷ்மீருக்கு செல்லவுள்ளன.
இதுமட்டுமன்றி, ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்வதற்கு, மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவராக வரும் நாள்களில் அந்த மாநிலத்துக்கு செல்வார்கள். ஜம்மு-காஷ்மீரில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அவை செயல்படுத்தப்படும் விதத்தை பார்வையிடும் பொறுப்பு மத்திய அமைச்சகங்கள், மத்திய அரசு துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் மத்திய அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் பணிகளை கேபினெட் செயலாளர் உன்னிப்பாக கவனித்து வருகிறார் என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டன.