ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை பாராட்டிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ஒரே நாடு, ஒரே அரசமைப்புச் சட்டம் இருக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டல கால கோரிக்கையாக இருந்தது என்று தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே அரசமைப்புச் சட்டம் இருக்க வேண்டும் என்பதே மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து, இந்திய அரசமைப்புச் சட்டம் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும் என்றானது.
ஒவ்வொரு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பும் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்றே மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கருத்தை தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது.
மாநில சட்டப்பேரவைகளின் அலுவல்கள் அதிகரிக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் ஓம் பிர்லா.