உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கு சமாஜவாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் இருந்து அக்கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் சஞ்சய் சேத் மற்றும் சுரேந்திர சிங் நாகர் ஆகிய இருவரும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவுக்கு தெரிவித்ததுடன், தங்கள் பதவியை இந்த மாதத் தொடக்கத்தில் ராஜிநாமா செய்தனர்.
அதைத் தொடர்ந்து தங்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் அவர்கள் இருவரும் இணைந்தனர். அதையடுத்து அவர்களது எம்.பி.பதவிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அவர்களது பதவிக்காலம் வரும் 2022-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி வரை உள்ளதால், அந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த திட்டமிட்டப்பட்ட நிலையில், அந்த 2 இடங்களுக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கை வரும் 5-ஆம் தேதி வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம்
தெரிவித்தது.