இந்தியா

உடல் உறுதியாக இருந்தால் மனம் உறுதியாக இருக்கும்: ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடக்கிவைத்து பிரதமர் மோடி பேச்சு

30th Aug 2019 01:29 AM

ADVERTISEMENT


 ஃபிட் இந்தியா இயக்கத்தை வியாழக்கிழமை தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, உடல் உறுதியாக இருந்தால், உள்ளமும் உறுதியாக இருக்கும் என்று கூறினார். 

மக்களின் அன்றாட வாழ்க்கையில் உடல் சார்ந்த உழைப்பையும், விளையாட்டையும் ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் ஃபிட் இந்தியா இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த இயக்கத்தை தொடக்கி வைத்தார். 

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்த ஆண்டு தேசிய விருது வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 
விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையிலான 28 பேர் கொண்ட குழு இந்த ஃபிட் இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறது. 
இதில் விளையாட்டுத் துறை, கல்வித் துறை, ஆயுஷ் துறை, இளைஞர் நலத் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த செயலர்கள், இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், தனியார் அமைப்புகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். 

முன்னதாக, இந்த இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 
நமது உடற்கட்டை முறையாகப் பராமரித்தால், அதன்மூலம் அளவில்லாத பலன்கள் கிடைக்கும். உடல் உறுதியாக இருந்தால், மனமும் உறுதியாக இருக்கும் . உடற்தகுதியானது எப்போதும் நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. முன்பெல்லாம் ஒருவர் தினமும் 8 முதல் 10 கிலோ மீட்டர் நடந்தார். இல்லையேல் தினமும் ஓடியிருப்பார், அல்லது சைக்கிள் ஓட்டியிருப்பார். 

ADVERTISEMENT

ஆனால் தற்காலத்தில் தொழில்நுட்பத்தின் காரணமாக நமது உடல் உழைப்பு குறைந்துவிட்டது. நாம் போதிய அளவு உடல் உழைப்பை மேற்கொள்ளவில்லை என்று அந்த தொழில்நுட்மே நமக்கு தெரிவிக்கிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
சில நேரங்களில் 12 முதல் 15 வயது சிறுவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், 30 வயது நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் செய்திகளை கேட்கிறோம். 

இது கவலை தரும் விஷயமாகும். வாழ்வியல் அடிப்படையிலான இப்பிரச்னைகளை, நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலம் சரி செய்ய இயலும். 
உடற்தகுதியே நமது இப்போதைய தேவையாகும். உடலை தகுதிப்படுத்துவதற்குப் பதிலாக அதுபற்றிப் பேசுவது தற்போது நாகரீகமாகியுள்ளது. அதனால் எந்தப் பலனும் இல்லை. 

வாழ்வியலுடன் தொடர்புடைய இதுபோன்ற உடல்நலப் பிரச்னைகளை பல்வேறு நாடுகளும் எதிர்கொண்டுள்ளன. சீனா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகள் அதற்கெதிரான பிரசாரத்தை தொடங்கிவிட்டன.
நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன் இந்த ஃபிட் இந்தியா இயக்கத்தை நாம் புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்வோம். ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்தின் பிறந்த தினத்தில் இந்த இயக்கத்தை தொடங்கியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். 
எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும், அதில் நமது வீரர், வீராங்கனைகள் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளனர்.
அவர்களின் பதக்கங்கள் அவர்களது கடின உழைப்பை மட்டுமல்ல; புதிய இந்தியாவின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT