அரசுமுறைப் பயணமாக ரஷியா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவை புதன்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கர், ஹங்கேரியில் தனது பயணத்தை முடித்து விட்டு, செவ்வாய்க்கிழமை ரஷியா சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில் அவரை அந்நாட்டுப் பிரதிநிதிகள் வரவேற்றனர்.
வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்ற பின், ரஷியாவுக்கு ஜெய்சங்கர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், 40 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஷியாவுக்கு வந்தேன். உலகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்தியா-ரஷியா இடையேயான உறவு அப்படியே உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவை புதன்கிழமை சந்தித்தார். அந்நாட்டின் விளாடிவோஸ்டாக் நகரில் செப்டம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷியா செல்லவுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளை இருவரும் சேர்ந்து ஆய்வு செய்தனர்.
அதையடுத்து இருவரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது லாவ்ரோவ் பேசுகையில், யூரேஷிய பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் இந்தியா இடையேயான இலவச வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. யூரேஷிய நாடுகள் மற்றும் இந்தியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளன. பிரதமர் மோடியின் பயணத்தின்போது, இலவச வர்த்தகத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.
ரஷியா-ஈரான்-இராக் இடையேயுள்ள வழித்தடத்தைப் போல வடக்கு-தெற்குப் பகுதிகள் இடையே சர்வதேச வழித்தடத்தை உருவாக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகளை இருவரும் சேர்ந்து ஆய்வு செய்தோம் என்றார்.
யூரேஷிய பொருளாதாரக் கூட்டமைப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பில் ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.