இந்தியா

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக-சிவசேனை சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடும்

29th Aug 2019 01:31 AM

ADVERTISEMENT


ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனையும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடும் என்று சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித் தனியாக போட்டியிட்டு, தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்தன. அந்தத் தேர்தலில் 288 தொகுதிகளில் பாஜக 122 இடங்களிலும், சிவசேனை 63 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன் பிறகு, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக 25 இடங்களிலும், சிவசேனை 23 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் பாஜக கூட்டணி 41 இடங்களைக் கைப்பற்றியது.
முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தேர்தலில் பாஜக-சிவசேனை ஆகியவை சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடும். மீதமுள்ள தொகுதிகளில் பிற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று இரு தலைவர்களும் கூறினர். இதனால், சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதே நிலைப்பாடு இருக்கும் என்று கருதப்பட்டது.
ஆனால், கடந்த வாரம் மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப் பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் பேசி முடிவெடுக்கும் என்றார். இதனால், சிவசேனை தரப்பு அதிருப்தியடைந்தது. 
மேலும் அண்மையில் பாஜக மற்றும் சிவசேனையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட தலைவர்கள் 12-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். இதனால், இரு கட்சிகளும் கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலைப்போல தனித்துப் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அப்போதுதான் இரு கட்சிகளும் புதிதாக இணைந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடியும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஏற்கெனவே பாஜகவுடன் மேற்கொண்ட தொகுதிப் பங்கீடு முறையில் (சம அளவில் போட்டியிடுவது) இப்போது வரை எவ்வித மாற்றமுமில்லை என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT