நாரதா முறைகேடு வழக்கில் விசாரணைக்காக ஆஜராகுமாறு, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபரூபா போத்தார் ஆகியோருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதில், சோவன் சாட்டர்ஜி திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர் ஆவார்.
சாட்டர்ஜி வரும் சனிக்கிழமை ஆஜராகுமாறும், அபருபா செப்டம்பர் முதல் வாரத்தில் ஆஜராகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணை: இதனிடையே, நாரதா முறைகேடு தொடர்பாக தில்லியில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான கே.டி. சிங்கிடம் சிபிஐ புதன்கிழமை விசாரணை நடத்தியதாக அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். காலையில் சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வந்த சிங்கிடம் மாலை வரையில் விசாரணை நடைபெற்றதாக அவர்கள் கூறினர். மேலும், நாரதா செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியர் மேத்யூ சாமுவேல்ஸையும் சிபிஐ அழைத்து விசாரித்துள்ளது.
நாரதா செய்தித் தொலைக்காட்சியின் சார்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு ரகசிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்களும், காவல்துறை உயரதிகாரிகளும் ஒரு நிறுவனத்துக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக லஞ்சம் பெறுவதைப் போன்று காணொலி பதிவு வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி.க்கள் உள்பட அக்கட்சியின் 12 முக்கியத் தலைவர்கள், மேற்கு வங்க அமைச்சர்கள், ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஆகியோருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.