ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2-ஆவது அரசின் கொள்கை முடக்கத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்களே காரணம் என காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து பெங்களூரில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: பிரதமர் மோடி செயல்படுத்தும் நல்ல திட்டங்களைப் பாராட்டி பேசினால், அது எதிர்க்கட்சிகளின் செல்வாக்கை உயர்த்தும் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர் போன்ற சிலர் பேசியுள்ளனர். இதுபோன்ற கருத்துகள் துரதிருஷ்டவசமானவை. ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர் ஆகிய இரு தலைவர்கள் மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2-ஆவது அரசின் கொள்கை முடக்கத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் காரணமாக இருந்தார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஜெய்ராம் ரமேஷ், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையைக் கவனித்து வந்தார். அதுமட்டுமல்லாமல், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். இதனால், நிலம் கையகப்படுத்தல் விவகாரங்களையும் கவனித்து வந்தார்.
தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் தொழில் முதலீடுகளில் ஈடுபடுவதற்காக நிலம் கையகப்படுத்துவதில் ஏராளமான தடைகளை உருவாக்கினார். அவர், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, அனைத்தும் எதிர்மறையாகவே நோக்கப்பட்டது. தொழில் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தடையில்லாச் சான்றிதழைப் பெறுவதை முழுமையாகத் தடுத்துவிட்டார். பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சிப்பதாகக் கூறும் ஜெய்ராம் ரமேஷின் கருத்து விரும்பத்தகாததாகும். இதுபோன்ற கருத்துகள் மூலம் பாஜகவுடன் ஜெய்ராம் ரமேஷ் சமசரம் செய்துகொள்ளத் தயாராகியுள்ளார் என்பதே உண்மை. சசி தரூரை முதிர்ச்சியான தலைவராக யாரும் கருதியதில்லை என்றார்.