ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
இந்தியா அமைதியை விரும்பும் நாடு. மற்ற நாடுகளின் மீது எக்காரணம் கொண்டும், இந்தியா தாக்குதல் நடத்தாது. ஆனால், மற்ற நாடுகள் தாக்குதல் தொடுக்கும்போது, அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். தற்காப்பு காரணத்துக்காக மட்டுமே ஆயுதங்களை இந்தியா தயாரித்து வருகிறது; போருக்காக அல்ல.
பல நாடுகள் நம்மைத் தாக்கின; நம்மை ஆட்சி செய்தன; நம்மை ஏமாற்றின; நம்முடைய வளங்களைக் கொள்ளையிட்டன. ஆனால், எந்த நாட்டையும் இந்தியா தாக்கியதில்லை. நம் நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அடிகோலிய விஞ்ஞானிகள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது அண்டை நாடுகளில் ஒன்று (பாகிஸ்தான்), பயங்கரவாதத்துக்குத் தொடர்ந்து ஆதரவும், நிதியுதவியும் அளித்து வருகிறது. அதிலுள்ள தீங்குகளை அந்நாடு புரிந்துகொள்ளாமல் செயல்பட்டு வருகிறது. அதை அந்நாடு புரிந்துகொள்ள வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் குறித்து விவாதிக்க எதுவும் இல்லை. அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து மட்டுமே நமது அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது என்றார் வெங்கய்ய நாயுடு.