இந்தியா

ரயில் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! டிக்கெட் கட்டணத்தில் 25% தள்ளுபடி

28th Aug 2019 03:35 PM | Muthumari

ADVERTISEMENT

 

ரயில்களில் காலியாக உள்ள இருக்கைளை நிரப்புவதற்கு, காலியான இருக்கைகளைக் கொண்ட குறிப்பிட்ட சில ரயில்களில் டிக்கெட் கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.  

இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் ஏசி முதல் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் என கட்டணத்திற்கு ஏற்ப பல்வேறு வகுப்புகள் உள்ளன. சமீபகாலமாக ரயில் கட்டணங்கள் உயர்த்தாத நிலையிலும், ரயில்களில் சாதாரண பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையே தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதை நாம் கண்கூடாகப்  முடிகிறது.

அதிலும் உயர்வகுப்பு பெட்டிகளில் வி.ஐ.பி-க்கள் மட்டுமே பயணித்து வருகின்றனர். மேலும், ரயிலில் உயர்வகுப்பு பெட்டிகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில், இதில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது. எனவே, காலி பெட்டிகளை நிரப்பும் பொருட்டு ரயில்வே துறை அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 

ADVERTISEMENT

அதன்படி, 50% வரையில் காலியான இருக்கைகளைக் கொண்ட குறிப்பிட்ட சில ரயில்களில் டிக்கெட் கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.  சதாப்தி எக்ஸ்பிரஸ், காதிமான் எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ், டபுள் டெக்கர் மற்றும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் உள்ள ஏசி மற்றும் சேர் கார் வகுப்புகளுக்கு இந்த தள்ளுபடி கட்டணம் வழங்கப்படும். 

மேலும், ரயிலின் பயண தூரம், ஒரு நிறுத்தத்திற்கும் மற்றொரு நிறுத்தத்திற்கும் உள்ள தொலைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். ஒவ்வொரு மண்டல தலைமை பதிவாளர் இதுகுறித்த முடிவுகளை எடுப்பார் என்று ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

மேலும், 'இந்த தள்ளுபடி ஒரு வருடம் அல்லது 6 மாத காலம் அல்லது மாத வாரியாக அல்லது வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என எதாவது ஒரு முறையில் தள்ளுபடி வழங்கப்படும். இதுவும் அந்தந்த ரயில்வே மண்டலங்களை பொறுத்து மாறுபடும். 

டெல்லியில் இருந்து லக்னோ செல்லும் ரயிலில் கான்பூரில் இருந்து லக்னோ வரையிலும் மற்றும் டெல்லியில் இருந்து அஜ்மீர் வரை ஓடும் அஜ்மீர் சதாப்தி ரயிலிலும் ஜெய்ப்பூர் முதல் அஜ்மீர் வரையிலும் பல இடங்கள் காலியாக உள்ளன என்று உதாரணம் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு இடையில் உள்ள காலி இடங்களை நிரப்பி ரயில்வே துறைக்கு வருமானத்தை பெருக்கவே இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ளது' என்று அதிகாரி விளக்கம் அளித்தார். 

பயணிகளுக்கான டிக்கெட் கட்டணத்தை ரத்து செய்வது குறித்த ஒரு சுற்றறிக்கை அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் விரைவாக செல்லக்கூடிய சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT