இந்தியா

ரிசர்வ் வங்கி உபரி நிதி விவகாரம்: ராகுலின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது- நிர்மலா சீதாராமன்

28th Aug 2019 04:32 AM

ADVERTISEMENT


ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிப்பது தொடர்பாக, ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது; இந்தக் குற்றச்சாட்டை கூறும் முன், தனது கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர்களிடம் அவர் ஆலோசித்திருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுலின் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் உபரி நிதி ரூ.1.76 லட்சம் கோடியை, குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசுக்கு அளிக்கலாம் என்று ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைக்கு ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழு கடந்த திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது. 
இந்த விவகாரத்தை முன்வைத்து, மத்திய அரசை எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன. இதுதொடர்பாக சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை பதிவிட்ட ராகுல் காந்தி, தங்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார சீரழிவுக்கு தீர்வு காண முடியாமல், பிரதமரும், நிதியமைச்சரும் குழப்பத்தில் உள்ளனர்; இதனால், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவர்கள் திருடுகின்றனர் என்று விமர்சித்தார். 
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புணேயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கூட்டத்தையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராகுலின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஆர்பிஐ உபரி நிதி தொடர்பாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டை சுமத்தும் முன், தனது கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர்களிடம் ராகுல் காந்தி ஆலோசித்திருக்க வேண்டும். திருட்டு குற்றச்சாட்டை முன்வைப்பதில் காங்கிரஸ் கட்சி நிபுணத்துவம் பெற்றுவிட்டது. அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகும், இதுபோன்ற விமர்சனங்களை காங்கிரஸ் தொடர்ந்து முன்வைத்து வருவது வியப்பளிக்கிறது. 
உபரி நிதி தொடர்பாக முடிவெடுப்பதற்காக, பிமல் ஜலான் குழுவை ரிசர்வ் வங்கிதான் அமைத்தது. நிதி ஸ்திரத்தன்மை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பலமுறை ஆலோசித்த பிறகுதான், உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்க அக்குழு முடிவு செய்தது. ரிசர்வ் வங்கியின் நம்பகத் தன்மை தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்கள் கற்பனையானவை என்றார் அவர்.
மேலும், ஆர்பிஐ அளிக்க முடிவு செய்துள்ள உபரி நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்று அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார மந்த நிலையை சமாளிக்க உதவும்: 2018-19 ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் உபரி ரூ.1,23,414 கோடி, திருத்தப்பட்ட பொருளாதார முதலீட்டு கட்டமைப்பின் (இசிஎஃப்) கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உபரி ரூ.52,637 கோடி என மொத்தமாக ரூ.1.76 லட்சம் கோடி உபரித் தொகை மத்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது. 
இதுதொடர்பாக துறைசார் நிபுணர்கள் கூறுகையில், மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கவிருக்கும் உபரி நிதி, முந்தைய 3 ஆண்டுகளில் அளிக்கப்பட்ட ஈவுத் தொகையை காட்டிலும் அதிகமாகும். இது, பொருளாதார மந்தநிலையை சமாளிக்கவும், அரசின் ரூ.3.3 லட்சம் கோடி மூலதன செலவுகளுக்கும் பெரிதும் உதவும். அரசின் கடன் குறைப்பு, வங்கிகளுக்கான மூலதனம், சரிவை சந்தித்துள்ள துறைகளுக்கு நிதிரீதியாக உத்வேகம் அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு, இந்த நிதியை மத்திய அரசு பயன்படுத்தும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

ADVERTISEMENT

ராகுல் மீது பாஜக சாடல்: ஆர்பிஐ உபரி நிதி தொடர்பான ராகுலின் குற்றச்சாட்டு பக்குவமற்றது; பொருளாதாரம் குறித்த அவரது தவறான புரிதலை வெளிக்காட்டுகிறது என்று பாஜக சாடியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் மேலும் கூறியதாவது:
ராகுல் மனம் முழுவதும் திருட்டு நிறைந்துவிட்டது. அவரது கட்சியோ, ஊழல் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகிவிட்டது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு எப்போதுமே பொது மக்களின் நலனுக்காகவும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும் பணியாற்றி வருகிறது. 
பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் மூலதன நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆர்பிஐ நிதி மத்திய அரசுக்கு மாற்றப்படுவது, நாட்டுக்கு மேலும் பயனளிக்கும் என்றார் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ்.
முன்னதாக, ஆர்பிஐ ஆளுநராக உர்ஜித் படேல் பதவி வகித்தபோது, உபரி நிதியை அரசுக்கு வழங்குவது தொடர்பாக அவருக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உர்ஜித் படேலும், ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரல் ஆச்சார்யாவும் தங்களது பதவிக் காலம் நிறைவடையும் முன்னரே பதவி விலகினர். ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் பொறுப்பேற்ற பின், உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க பிமல் ஜலான் குழு அமைக்கப்பட்டது

ரிசர்வ் வங்கியில் இருந்து நிதியைத் திருடுவதால் பலனில்லை
பொருளாதாரச் சீரழிவில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று தெரியாமல் பிரதமரும், மத்திய நிதியமைச்சரும் குழப்பத்தில் இருப்பதாகவும்,  இதற்காக அவர்கள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து திருடுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுளார்.


தேக்கமடைந்துள்ள பொருளாதாரத்துக்குப் புத்துயிரூட்டுவதற்காக தனது இருப்பில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்க ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை முடிவு செய்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பொருளாதாரச் சீரழிவை உருவாக்கியதே பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும்தான். தற்போது அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது என்று தெரியாமல் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து நிதியைத் திருடுவது பலனளிக்காது. இந்த நடவடிக்கை, துப்பாக்கித் தோட்டாவால் ஒருவருக்கு ஏற்பட்ட படுகாயத்துக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக, மருத்துவமனையில் இருந்து பேண்ட்-எய்ட் பிளாஸ்திரியைத் திருடி காயத்தின் மீது ஒட்டுவது போன்றதாகும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:  ரிசர்வ் வங்கியின் அவசரகால இருப்பு என்பது மிகவும் மோசமான நிதி நெருக்கடி நேரங்களிலும், போர் போன்ற சூழல்களிலும்தான் மத்திய அரசால் பயன்படுத்தப்படும். ஆனால் அந்த உபரி நிதியை பாஜக தற்போது தன்னால் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை சரிசெய்வதற்குப் பயன்படுத்துகிறது. அக்கட்சி தலைமையிலான அரசு, ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை சீரழித்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான சஞ்சய் வெளியிட்ட பதிவில், ரிசர்வ் வங்கி தற்போது கொள்ளையடிக்கப்பட்ட வங்கியாக மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் 99% லாபத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது
கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து ரிசர்வ் வங்கி ஈட்டிய லாபத்தில் 99 சதவீதத்தை மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: வங்கிகளின் கடைசி புகலிடமாக  ரிசர்வ் வங்கி இருந்து வருகிறது. இந்த நிலையில், அதன் கையிருப்பை பயன்படுத்திக் கொள்வது மிகவும் கண்டனத்துக்குரியது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்  ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி ஈட்டிய லாபத்தில் 99 சதவீதத்தை மோடி அரசு அதன் பிரச்சார திட்டங்களுக்காக பயன்படுத்தியுள்ளது. தற்போது அதனை முழுவதுமாக கைப்பற்ற உள்ளது. மோடியின் கூட்டாளிகளால் கொள்ளையடிக்கப்பட்ட வங்கிகளின் மறுமூலதனத்துக்காகவே தற்போது  ரிசர்வ் வங்கியிடமிருந்து  ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பெறுகிறது. மோடி ஆட்சியில் பொதுத் துறையில் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு, அந்த நிறுவனங்கள் மீது மத்திய அரசு  நிதிச் சுமையை ஏற்றியதே முக்கிய காரணம் என்று யெச்சூரி தெரிவித்துள்ளார்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT