இந்தியா

மத்திய அரசின் அறிவிக்கை வெளியாகும் முன்பு இறக்குமதியான பொருள்களுக்கு வரி உயர்வு பொருந்தாது: பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம்

28th Aug 2019 01:34 AM

ADVERTISEMENT


புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு உயர்த்தப்பட்ட 200 சதவீத சுங்க வரி உயர்வு, அதுதொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை வெளியாகும் முன்பு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு பொருந்தாது என்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் 41 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட வர்த்தகத்துக்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றது. மேலும், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான சுங்க வரி பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி முதல் 200 சதவீதமாக உயர்த்தப்படுவதாகவும் இந்தியா அறிவித்தது.
இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் இறக்குமதியாளர்கள் 27 பேர் கடந்த மே மாதம் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அவர்கள், மத்திய அரசின் முடிவு பிப்ரவரி 16ஆம் தேதி வேலை நேரம் முடிவடைந்து இரவு 8.45 மணிக்குதான் அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. ஆனால் சுங்க வரியை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கும் முன்பு பாகிஸ்தானில் இருந்து சில பொருள்களை இறக்குமதி செய்ய தீர்மானித்து, அதற்கான வரியை கட்டி விட்டோம். அதன்படி, அந்த பொருள்கள் பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு முன்பு அட்டாரி -வாகா எல்லை வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு  விட்டன. இந்தியாவுக்குள் பொருள்கள் கொண்டு வரப்பட்டபோது அளிக்கப்பட்ட ரசீதுகளை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். எனினும், அந்தப் பொருள்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பின்படி 200 சதவீத சுங்க வரியும், 28 சதவீத ஐஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்து, அவற்றை விடுவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜஸ்வந்த் சிங், லலிதா பத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், 27 இறக்குமதியாளர்களால் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், இந்தியாவுக்குள் பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 6 மணிக்கு கொண்டு வரப்பட்டு விட்டன. அதாவது, மத்திய அரசின் அறிவிக்கை வெளியாகும் முன்பு பொருள்கள் கொண்டு வரப்பட்டு விட்டன. அதற்கான ரசீதுகளும் அளிக்கப்பட்டு விட்டது. எனவே 200 சதவீத வரி உயர்வு என்பது, அப்பொருள்களுக்கு பொருந்தாது. எனவே அந்தப் பொருள்களை 7 நாள்களுக்குள் அதிகாரிகள் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT