இந்தியா

மத்திய அரசிடமிருந்து மூலதன நிதி தேவைப்படாது: பாரத ஸ்டேட் வங்கி

28th Aug 2019 01:37 AM

ADVERTISEMENT


தங்களிடம் போதுமான அளவுக்கு மூலதனம் இருப்பதால், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து கூடுதல் மூலதன நிதி எதுவும் தேவைப்படாது என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.
பொதுத் துறை வங்கிகள் கடன் அளிப்பதை அதிகரிக்கவும், பணப்புழக்கத்தை மேம்படுத்தவும் ரூ.70,000 கோடி கூடுதல் மூலதன நிதி உடனடியாக வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதுதவிர, ஆட்டோமொபைல் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறை உள்ளிட்டவற்றுக்கு உத்வேகம் அளிப்பதற்கான பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
இந்நிலையில், மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ்பிஐ நிர்வாக இயக்குநர் அர்ஜித் பாசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் அறிவிப்புகள், தொழில்துறை நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் அதன் பண்பை வெளிப்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையால், பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டன. விழாக்காலம் வரவுள்ள நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்.
எஸ்பிஐ வசம் போதுமான மூலதனம் உள்ளது. எனவே, மத்திய அரசு வழங்கும் கூடுதல் மூலதன நிதி எஸ்பிஐக்குத் தேவைப்படாது என நினைக்கிறேன். சந்தைகளிலிருந்தே போதுமான மூலதனத்தை எங்களால் திரட்ட முடியும். 
சந்தைகளில் மூலதனத்தைத் திரட்ட முடியாத வங்கிகளுக்கே, மத்திய அரசு அளிக்கும் கூடுதல் மூலதன நிதி தேவைப்படும். முதலீடுகளை விரிவுபடுத்துவதன் வாயிலாக மூலதனத்தைத் திரட்டவும் எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது என்றார் அர்ஜித் பாசு.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT