இந்தியா

ஜம்மு-காஷ்மீர் ஆளுநருடன் சிஆர்பிஎஃப் ஏடிஜி சந்திப்பு

28th Aug 2019 01:20 AM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை செவ்வாய்க்கிழமை சந்தித்த சிஆர்பிஎஃப் கூடுதல் தலைமை இயக்குநர் (ஏடிஜி) ஜல்பிகர் ஹசன் பாதுகாப்பு நிலவரம் குறித்து அவரிடம் விவரித்தார்.
இதுதொடர்பாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஸ்ரீநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் சத்யபால் மாலிக்கை சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் ஹசன் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார். காஷ்மீரின் இப்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்தும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் குறித்தும் விவரம் தெரிவித்தார். 
காஷ்மீரில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்காக பாதுகாப்புப் படையினரை ஆளுநர் பாராட்டினார். அதன் பின்னர், எந்நேரமும் விழிப்புடன் இருக்குமாறும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்குமாறும் சிஆர்பிஎஃப் படையினருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் மகளிர் மற்றும் குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவர் வசுந்தரா பாடக், ஆளுநரைச் சந்தித்து பேசினார். காஷ்மீரில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தனர் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
காஷ்மீரில் அமைதி: ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவுவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். எனினும், அங்கு தொடர்ந்து 23-ஆவது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீரில் திங்கள்கிழமை எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை. சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதற்காக வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில்  விதிக்கப்பட்டிருந்த தடைகள் முற்றிலும் நீக்கப்பட்டன. 
பல இடங்களில் தொலைபேசி சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், பத்திரிகை அலுவலகங்களிலும், ஸ்ரீநகரின் லால் செளக் பகுதியிலும் தொலைபேசி சேவை துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. 
தொடர்ந்து 23-ஆவது நாளாக கடைகள், சந்தை, வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனினும், மக்கள் தங்களது சொந்த வாகனங்களில் அலுவலகங்களுக்கு சென்றனர்.  தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், அரசு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு செல்லவில்லை என்றனர். 
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கிய பிறகு, அங்கு கடும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மத்திய அரசு விதித்தது. காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களும், முன்னாள் முதல்வர்களுமான மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசி சேவைகளுக்கும், இணையதளச் சேவைகளுக்கும், செய்தி தொலைக்காட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இடங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கலாம் என்று ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிப்பதாக ஆளுநர் கூறியதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக எவ்வித சர்ச்சை கருத்துகளும் கூறாமல் இருந்தால், வீட்டுக் காவலில் உள்ள மற்றும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஆளுநர் தெரிவித்தாக செய்தி வெளியான நிலையில், இதற்கும், ஆளுநருக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT