உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி, 2 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில், 3 குழந்தைகள் 17 பேர் பலியாகினர்.
இதுதொடர்பாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஷாஜகான்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை- 24இல் செவ்வாய்க்கிழமை காலை அதிவேகமாக வந்த ஒரு லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. முன்னால் சென்ற டெம்போ, வேன் ஆகிய வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதியதுடன், அந்த வேன் மீது லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில், 3 குழந்தைகள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட ஒரு பெண், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் 4 பேர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய டெம்போவும், வேனும் முறையே பர்டாரா, ஷாஜகான்பூர் ஆகிய பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றி வந்தவையாகும். லாரியின் ஓட்டுநர், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். அவரது உதவியாளர் மட்டும் சிக்கியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
இதனிடையே, விபத்துக்கான காரணம் குறித்தும், பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் முறையான அனுமதி பெற்றவையா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தவுள்ளதாக பரேலி மண்டல ஆணையர் ரன்வீர் பிரசாத் தெரிவித்தார்.
முதல்வர் இரங்கல்: ஷாஜகான்பூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகிஆதித்யநாத், அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.