இந்தியாவின் முதல் பெண் காவல் துறை டிஜிபி என்ற பெருமையைப் பெற்ற காஞ்சன் செளதரி பட்டாச்சார்யா (72), உடல் நலக் குறைவால் காலமானார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறுகையில், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் தனது கணவர் மற்றும் மகள்களுடன் வசித்து வந்த காஞ்சன், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெறவுள்ளது என்றனர்.
ஹிமாசலப் பிரதேசத்தில் பிறந்த காஞ்சன், கடந்த 1973-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2004-ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநில காவல் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டதையடுத்து நாட்டின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை அவர் பெற்றார். தனது பதவிக்காலத்தில், பல பரபரப்பான வழக்குகளையும், முக்கிய வழக்குகளையும் அவர் விசாரித்தார். தேசிய பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்ற சையது மோடி கொலை செய்யப்பட்ட வழக்கை இவரே கையாண்டார்.
மத்திய தொழிலக பாதுகாப்பு படை( சிஐஎஸ்எஃப்) பிரிவின் ஐஜியாக (பொது இயக்குநர்) பதவி வகித்துள்ள இவர், கடந்த 1997-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருது பெற்றார். அதைத்தொடர்ந்து, பணியில் சிறந்து விளங்கியதற்காக, ராஜீவ் காந்தி விருதையும் பெற்றார்.
நாட்டின் 2-ஆவது பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையும் இவரைச் சேரும். நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி, இப்போது புதுச்சேரி ஆளுநராக இருக்கும் கிரண் பேடி என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரகண்ட் காவல் துறை இரங்கல்: காஞ்சன் பட்டாச்சார்யா குடும்பத்தினருக்கு உத்தரகண்ட் மாநில காவல் துறை இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான பதிவில், மாநிலத்தின் முன்னாள் டிஜிபி உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு மாநில காவல் துறை சார்பாக இரங்கல் தெரிவிக்கிறோம். அவர் ஆற்றிய பணிகளை உத்தரகண்ட் மாநிலம் என்றும் நினைவு கூரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அசோஷியேஷன் இரங்கல்: காஞ்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஐபிஎஸ் அசோஷியேஷன் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், நாட்டின் முதல் பெண் டிஜிபி, இரண்டாவது பெண் ஐபிஎஸ் அதிகாரி என பல பெருமைகளைப் பெற்றார். பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். எங்களில் பலருக்கு முன்மாதிரியாக திகழ்ந்த ஒருவரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, உத்தரகண்ட் மாநில ஐபிஎஸ் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.