வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை நாடு திரும்பிய பிரதமர் மோடி, மறைந்த பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லியின் தில்லி இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அருண் ஜேட்லியின் மனைவி, மகள், மகனுடன் நரேந்திர மோடி பேசி ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அருண் ஜேட்லியின் மகன் ரோகனுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஜேட்லி இல்லத்தில் பிரதமர் இருந்தார். அப்போது, ஜேட்லியின் இதர குடும்ப உறுப்பினர்களும் அங்கு இருந்தனர். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சனிக்கிழமை தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் என முக்கியப் பிரமுகர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
அவரது உடல் தில்லியில் உள்ள நிகம் போத் காட் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்ததால், ஜேட்லியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை. எனினும், ஜேட்லியின் மறைவு குறித்து அறிந்ததும் பிரதமர் உடனடியாக தனது சுட்டுரைப் பக்கத்தில் இரங்கல் பதிவிட்டிருந்தார்.
மேலும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த போதிலும் ஜேட்லியின் மறைவையடுத்து தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும் இந்தியா திரும்பி வருவதாக பிரதமர் இருந்ததாகவும், ஆனால், ஜேட்லியின் மனைவி, மகன் ஆகியோர் வெளிநாட்டுப் பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு வரவேண்டாம் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
பஹ்ரûனில் ஒரு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, என்னுடைய நெருங்கிய நண்பர் அருண் ஜேட்லி தற்போது உயிருடன் இல்லாத போது, இங்கு பஹ்ரைனில் நான் இருப்பதை நினைத்துகூடப் பார்க்க முடியவில்லை. கொஞ்ச நாள்களுக்கு முன்பு எங்களது முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சகோதரி சுஷ்மா ஸ்வராஜை இழந்திருந்தோம். இன்று என்னுடைய நெருங்கிய நண்பர் அருண் காலமாகிவிட்டார் என்று உருக்கத்துடன் கூறியிருந்தார்.
அருண் ஜேட்லியின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்ட பிறகு அவரது அஸ்தியை அவரது மகன் ரோகன் ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் திங்கள்கிழமை கரைத்தார்.