இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிறப்பு பாதுகாப்பு ரத்து

27th Aug 2019 01:20 AM

ADVERTISEMENT


முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பை (எஸ்பிஜி) மத்திய அரசு நீக்கியுள்ளது. எனினும், அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை கூறுகையில்,  முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு  திரும்பப் பெறப்படுகிறது. 
அதற்குப் பதிலாக, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ், சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த வீரர்கள் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படலாம். இசட் பிளஸ் பாதுகாப்பு வீரர்கள் தில்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற பின்னர், எஸ்பிஜி படையினர் திரும்பி விடுவர். இதுதொடர்பாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
மன்மோகன் சிங்குக்கான எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கப்பட்டதையடுத்து, இப்போது, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு மட்டும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றதையடுத்து, கடந்த 1988-ஆம் ஆண்டு சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) சட்டம் இயற்றப்பட்டது. காவல் துறையினர் உள்பட பாதுகாப்பு பணியில் சிறந்த வீரர்கள் இந்தக் குழுவில் நியமிக்கப்படுவார்கள். இந்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டபோது, முன்னாள் பிரதமர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து எந்த விதிகளும் சேர்க்கப்படவில்லை.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு கொல்லப்பட்டதையடுத்து, முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவதற்கு அந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர், கடந்த 2003-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், முன்னாள் பிரதமர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு 10 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டது. அச்சுறுத்தலை பொருத்து அவர்களின் சிறப்பு பாதுகாப்பு காலம் நீட்டிக்கப்படும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி, மன்மோகன் சிங்கின் சிறப்பு பாதுகாப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவருக்கு அச்சுறுத்தல் ஏதுமில்லை என்பதால், எஸ்பிஜி பாதுகாப்பு தேவையில்லை என்று கடந்த மே மாதம் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்தன. அதன் பின்னர் அமைச்சரவைச் செயலரும், உள்துறை அமைச்சகத்தினரும் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். 3 மாதங்களாக பல்வேறு உளவுத் துறை அமைப்புகளிடம் இருந்து தகவல்களைப் பெற்ற பின்னர், அவரது சிறப்பு பாதுகாப்பை நீக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT