நக்ஸல்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நாட்டில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்ஸல் தீவிரவாதிகளால் சத்தீஸ்கர், ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பிகார், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் உயரதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லியில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுவர் தாஸ், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ரவி சங்கர் பிரசாத், நரேந்திர சிங் தோமர், நிதின் கட்கரி, மகேந்திர நாத் பாண்டே, உள்துறை அமைச்சக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நக்ஸல் தீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமித் ஷா ஆய்வு நடத்தினார் என்றார்.
கடந்த 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை நாட்டில் நக்ஸல் வன்முறை தொடர்பாக 8,782 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன எனவும், இது கடந்த 2014 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,969-ஆக குறைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதே காலகட்டத்தில், நக்ஸல் தீவிரவாதத்தால் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 3,326லிருந்து 1,321-ஆக குறைந்ததாகவும் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வசதி அவசியம்: மத்தியப் பிரதேசத்தில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பாலாகாட், மண்டலா ஆகிய மாவட்டங்களில் 4ஜி தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அந்த மாநில முதல்வர் கமல் நாத் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால், அந்தப் பகுதிகளில் நிலவும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனடியாகப் பெறமுடிவதில்லை. எனவே, அங்கு 4ஜி தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், அந்த மாவட்டங்களில் சாலைப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த ரூ.33.74 கோடி நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றார்.
கொள்கையில் மாற்றம் தேவை: இடதுசாரி தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், நக்ஸல் தீவிரவாதம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் செலவு முழுவதையும் மாநில அரசுகளே கவனித்து வருகின்றன. இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். காவல் படை ஆயுதங்களை நவீனப்படுத்தத் தேவையான நிதியையும் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றார்.
மக்களாட்சிக்கு எதிரானது: ஆலோசனைக் கூட்டம் குறித்து, அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இடதுசாரி தீவிரவாதம், மக்களாட்சிக்கு எதிரானது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அதை வேரறுக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.