ஜேட்லி மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் இரங்கல் 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜேட்லி மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் இரங்கல் 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 அமித் ஷா (உள்துறை அமைச்சர்): ஏழைகளின் நலனுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தியதன் மூலமும், இந்தியாவை உலகின் வேகமான பொருளாதார நாடாக இடம் பெறச் செய்வதிலும் அருண் ஜேட்லி ஒரு அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுவிட்டுச் சென்றுள்ளார். தனித்துவமிக்க அனுபவம், அரிதான திறன்களுடன் கட்சியிலும் அரசியலிலும் பல்வேறு பொறுப்புகளை திறம்பட ஆற்றியுள்ளார். சிறந்த பேச்சாளர்; அர்ப்பணிப்புமிக்க ஆர்வலர். அவர் நாட்டின் நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
 மக்கள் நலன் சார்ந்தவராகவும், சாமானிய மனித நலத்தை எப்போதும் சிந்திப்பவராகவும் இருந்தவர்.
 அவருடைய ஒவ்வொரு முடிவும், அது கருப்புப் பணத்தின் மீதான நடவடிக்கையாக இருந்தாலும் சரி அல்லது ஒரே தேசம், ஒரே வரி எனும் ஜிஎஸ்டி வரிக் கனவை செயல்படுத்துவதாக இருந்தாலும் சரி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக இருந்தாலும் இத்தரத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. எளிமை மற்றும் உணர்வுப்பூர்வ ஆளுமைக்காக தேசம் அவரை எப்போதும் நினைவுகூரும். அவருடைய மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பாகும். நான் கட்சியின் மூத்த தலைவரை மட்டும் இழக்கவில்லை. பல ஆண்டுகளாக ஆதரவும், வழிகாட்டுதலும் அளித்து வந்த குடும்ப உறுப்பினரை இழந்துள்ளேன். இன்றைக்கு அவரது பிரிவு நாட்டு அரசியலிலும், பாஜகவிலும் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த இடத்தை விரைவில் நிரப்ப வாய்ப்பில்லை.
 ராஜ்நாத் சிங் (பாதுகாப்புத் துறை அமைச்சர்): நாட்டின் பொருளாதாரத்தை சிரமமான நிலையில் இருந்து மீட்டு சரியான பாதைக்கு மீண்டும் இட்டுச் சென்றதற்காக ஜேட்லி எப்போதும் நினைவுகூரப்படுவார்.
 நிர்மலா சீதாராமன் (நிதி அமைச்சர்): அருண் ஜேட்லியின் இழப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவர் நம்மில் பலருக்கும் வழிகாட்டியாகவும், ஆதரவாகவும், பலமாகவும் இருந்தார். அவரிடமிருந்து நாம் பலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளோம். அவர் நல்ல இதயமுள்ள நபர். யாருக்கும் எப்போதும் உதவக் கூடியவர். அவரது நுண்ணறிவு, புத்திசாலித்தனம், ஆழமான அறிவு ஒப்பற்றது.
 ராம் விலாஸ் பாஸ்வான் (உணவுத் துறை அமைச்சர்): சிறந்த தலைவர்களில் ஒருவராகவும், நல்ல மனிதராகவும் திகழ்ந்தவர். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 ஸ்மிருதி இரானி (மகளிர், குழந்தைகள் நலத் துறை அமைச்சர்): தேசத்திற்காகவும், அமைப்புக்காகவும் அர்ப்பணிப்புடன், ஆர்வத்துடன் பணியாற்றிய திடமிக்க தலைவர். சிறந்த பேச்சாற்றல் மிக்கவர்.
 ஹர்சிம்ரத் கௌர் பாதல் (உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர்): அருண் ஜேட்லி நம் எல்லோருக்கும் ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார். ஒரு புகழ்பெற்ற நாடாளுமன்றவாதி, தொலைநோக்குப் பார்வைமிக்கவர். மக்கள் நலனுக்காகவும், நாட்டின் நிர்மாணத்திற்காகவும் தனது உறுதியான முயற்சிகள் மூலம் மக்களின் மரியாதையை வென்றவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com