ராமாயணத் தலங்களுக்கு சுற்றுலா: ரயில்வே மீண்டும் அறிமுகம்

ராமபிரானுடன் தொடர்புடைய இடங்களுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் இந்த ஆண்டும் அறிவித்துள்ளது.
ராமாயணத் தலங்களுக்கு சுற்றுலா: ரயில்வே மீண்டும் அறிமுகம்


ராமபிரானுடன் தொடர்புடைய இடங்களுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் இந்த ஆண்டும் அறிவித்துள்ளது.

கடவுள் ராமருடன் தொடர்புடைய, ராமாயணத்தில் வரும் இடங்களுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை கடந்த ஆண்டு ஐஆர்சிடிசி அறிவித்தது. இதற்காக சிறப்பு சுற்றுலா ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த சுற்றுலா பயணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு இந்தத் திட்டம் வெற்றியடைந்ததையடுத்து இந்த ஆண்டும் அந்தத் திட்டத்தை ஐஆர்சிடிசி மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கடவுள் ராமருடன் தொடர்புடைய இந்தியப் பகுதிகள் மற்றும் இலங்கைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள பகுதிகள் சிறப்பு சுற்றுலா ரயில்கள் மூலமும், இலங்கைக்கு விமானம் மூலமும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும். கடந்த ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கியபோது, சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அதனால் இந்த ஆண்டும் இந்த சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். 

ராமருடன் தொடர்புடைய  இடங்களை பார்வையிட விரும்பும் பயணிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் உள்ள ராமாயணத் தலங்களை மட்டும் பார்வையிடுவதற்கு சுற்றுலாக் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 16, 065 செலுத்த வேண்டும். 16 பகல், 17 இரவுகள் இந்த சுற்றுலா அழைத்துச் செல்லப்படும். இலங்கையையும் பார்வையிட விரும்புபவர்கள், ஒரு நபருக்கு ரூ. 36,950 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ராமாயண யாத்திரை என்று அழைக்கப்படும் சுற்றுலா ரயில் நவம்பர் 3-ஆம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் புறப்படவுள்ளது. ராமாயணா விரைவு ரயில் என்று அழைக்கப்படும் இரண்டாவது ரயில், நவம்பர் 18-ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் புறப்படவுள்ளது.

அதற்கடுத்த மாதங்களில் மதுரையில் இருந்து ஒரு ரயிலை இயக்க திட்டமிட்டு வருகிறோம் என்று அதிகாரிகள் கூறினர்.

இந்த ராமாயணத் தலங்கள் சுற்றுலா மூலமாக இந்தியாவில் உள்ள ராமஜென்மபூமி, அயோத்தி அனுமன் கோயில், வாராணசி, பிகாரில் உள்ள சீதை கோயில், திரிவேணி சங்கமம், பிரயாகையில் உள்ள பரத்வாஜ ஆசிரமம், ஹம்பி, ராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோயில் ஆகியவையும், இலங்கையில், சீதை கோயில், சிவன் கோயில் உள்ளிட்டவற்றையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com