கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான்: ஆசிய-பசிபிக் குழு நடவடிக்கை

பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி கிடைப்பதை தடுக்க தவறியதற்காக, பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்த்து, சர்வதேச பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) செயல்படும் ஆசிய-பசிபிக் குழு


பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி கிடைப்பதை தடுக்க தவறியதற்காக, பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்த்து, சர்வதேச பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) செயல்படும் ஆசிய-பசிபிக் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
41 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய பசிபிக் குழுவின் மாநாடு, ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இந்தியா சார்பில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை மற்றும் நிதித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு தேசிய வங்கியின் ஆளுநர் தலைமையிலான குழு பங்கேற்றது.
பயங்கரவாத குழுக்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்காக, ஆசிய-பசிபிக் குழுவால் 40 விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றில், 32 விதிமுறைகளை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை என்பது விவாதங்களின் முடிவில் உறுதி செய்யப்பட்டது. லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுக்கு நிதி கிடைப்பதை தடுக்க தவறியதற்காக, ஆசிய-பசிபிக் குழுவின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, எஃப்ஏடிஎஃப்-இன் கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளது. இந்த அமைப்பின் மாநாடு, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ளது. இந்த அமைப்பு, பாகிஸ்தானுக்கான 27 அம்ச செயல்திட்டத்தை ஏற்கெனவே நிர்ணயித்துள்ளது. இந்த செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு அக்டோபருடன் முடிவடைகிறது. செயல்திட்டத்தை பூர்த்தி செய்யாத பட்சத்தில், எஃப்ஏடிஎஃப்-இன் கருப்புப் பட்டியலிலும் பாகிஸ்தான் சேர்க்கப்படும். இதன் மூலம், உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பெறுவதில் பாகிஸ்தானுக்கு சிக்கல் ஏற்படும்.
முன்னதாக, எஃப்ஏடிஎஃப்-இன் கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஜூனில் சேர்க்கப்பட்டது. மேலும், 24 அம்ச செயல்திட்டமும் நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரிலும், கடந்த பிப்ரவரியிலும் நடைபெற்ற எஃப்ஏடிஎஃப் கூட்டங்களின்போது, பாகிஸ்தானின் செயல்பாடுகள் தொடர்பாக மறுஆய்வு செய்யப்பட்டது. எனினும், கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலிலேயே தொடர்ந்து பாகிஸ்தான் வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com