அரசியல் 'சாணக்கியர்' அருண் ஜேட்லி மறைவு: வாழ்க்கை சொல்லும் வரலாறு!

முன்னாள் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 66.
அரசியல் 'சாணக்கியர்' அருண் ஜேட்லி மறைவு: வாழ்க்கை சொல்லும் வரலாறு!


முன்னாள் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 66.

சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜேட்லி கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அருண் ஜேட்லி இன்று பிற்பகல் 12.07 மணிக்கு காலமானதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1952ம் ஆண்டு பிறந்தவர் அருண் ஜேட்லி. நரேந்திர மோடியின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் நாட்டின் உயிர் நாடியாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ரோஹன் மற்றும் சோனாலி என்ற பிள்ளைகளும் உள்ளனர்.

விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை சேமிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அருண் ஜேட்லி, வழக்குரைஞராக இருந்து, அரசியலில் ஈடுபட்டு, பாஜகவின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தவர். தேர்தல்களின் போது அருண் ஜேட்லி வகுக்கும் பல வியூகங்கள் இதுவரை தோல்வியடைந்ததில்லை என்றாலும், 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவரையே மக்கள் தோற்கடித்தனர் என்பதுதான் விநோதம்.

2014 - 2019ம் ஆண்டில் மத்திய நிதித் துறை அமைச்சராகவும், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சட்டத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். மோடியின் முந்தைய ஆட்சி காலத்தில் அனைத்து பட்ஜெட்டுகளையும் அருண் ஜேட்லியே தாக்கல் செய்தார். உடல் நலக் குறைவு காரணமாக 2019 இடைக்கால பட்ஜெட்டை மட்டும் அவர் தாக்கல் செய்யவில்லை. அவருக்கு பதில் நிதித்துறைப் பொறுப்பு வகித்த பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி தாக்கல், பட்ஜெட் தாக்கல் செய்வதை பிப்ரவரி 1ம் தேதிக்கு மாற்றியது என அவர் நிதித்துறை அமைச்சராக பதவிவகித்தக் காலத்தில் மிகப்பெரிய கடினமான முடிவுகளை அறிவித்து, நிலைமையை சரியாகக் கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில பாரதிய மாணவர் அமைப்பில் மாணவர்கள் தலைவராக இருந்த அருண் ஜேட்லி, இந்தியாவில் அவசரநிலை பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்ட முக்கியத்தலைவர்களில் ஒருவர். 19 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த அருண் ஜேட்லி பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். வழக்குரைஞராக தனது பணியைத் தொடங்கிய அருண் ஜேட்லி, இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மத்திய அரசின் வழக்குரைஞராக பதவி வகித்தவர் என்ற பெருமையை வி.பி. சிங் ஆட்சி காலத்தில் பெற்றார்.

1999ம் ஆண்டு பாஜக பதவிக்கு வந்த போது, சட்டத்துறை அமைச்சராகவும், மத்திய வர்த்தகத் துறை அமைச்சராகவும் பதவிகளை அலங்கரித்துள்ளார்.

அருண் ஜேட்லி பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்தபோது தான்  மோடியுடன் நெருக்கம் ஏற்பட்டது.

2004ம் ஆண்டு பாஜக ஆட்சியை இழந்த பிறகு, ஒரு எதிர்க்கட்சியாக பாஜகவை முன்னிலைப் படுத்தியவர் அருண் ஜேட்லி. கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். அந்த சமயத்தில் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அவரது பேச்சு நிதானமாகவும், ஒவ்வொரு வார்த்தையையும் வலிமை மிகுந்ததாக எடுத்து வைத்த விதம் அவை உறுப்பினர்களை மட்டுமல்ல, பொதுமக்களையும், ஊடகங்களையும் வெகுவாகவே கவர்ந்தது. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி மிகச் சிறந்த பணியை மேற்கொண்டார்.

அந்த அனுபவமே, மோடியின் ஆட்சி மத்தியில் அமைந்த போது, அரசு எடுக்கும் மிக முக்கிய கொள்கை முடிவுகளின் போது எதிர்க்கட்சியினர் தொடுக்கும் பல்வேறு கேள்விக் கணைகளையும் அவர் அதே பொறுமையுடன் எதிர்கொண்டு சாமர்த்தியமாக பதில் அளிக்கும் திறமையைக் கொடுத்தது.

பாஜகவுக்கு அமித் ஷாவுக்கு முன்பிருந்தே ஒரு சாணக்கியராக திகழ்ந்தவர் அருண் ஜேட்லி என்றே அரசியலை உற்று கவனித்து வருவோர் கூறுகிறார்கள்.

ஊடகங்களைப் பொறுத்தவரை அருண் ஜேட்லி வெகு எளிதாகக் கையாளக் கூடியவரகாவும், அவ்வப்போது ஊடகங்களை சந்தித்து தகவல்களை பரிமாறிக் கொள்பவராகவுமே இருந்துள்ளார். தனது கட்சியின் கருத்தை, மத்திய அரசின் நிலைப்பாட்டை ஊடகத்தினருக்கு எளிதாக விளக்கி, அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையோடு பதில் சொல்லும் விதம் வேறு எந்த தலைவருக்கும் வாய்க்கப்பெறாத திறனாகவே இதுவரை கருதப்படுகிறது.

எப்போதுமே தன்னை ஒரு மிகப்பெரிய தலைவர் போல காட்டிக் கொள்ளாத அருண் ஜேட்லி, 2014ம் ஆண்டு மோடி அலை அடித்தும் கூட மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு பெற்றவர்.

சமீபகாலமாக உடல் நலக் குறைவு காரணமாக, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார். தனது உடல்நலனைக் கவனிக்கப் போவதாகவும் அறிவித்து ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில், சிறுநீரகப் பிரச்னை காரணமாக ஆகஸ்ட் 9ம்தேதி அருண் ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 24ம் தேதி உயிரிழந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com