வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

காஷ்மீர் விவகாரத்தை அதிபர் டிரம்ப் உன்னிப்பாக கவனித்து வருகிறார்: வெள்ளை மாளிகை அதிகாரி

DIN | Published: 24th August 2019 01:11 AM


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அவர் தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி நீக்கியது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்துவதற்காக மத்தியஸ்தம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்ததாக அதிபர் டிரம்ப் கடந்த மாதம் தெரிவித்திருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யவோ அல்லது அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவோ தயாராக இருப்பதாக அவர் மீண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தையும், அங்கு நிலவி வரும் சூழலையும் அதிபர் டிரம்ப் உன்னிப்பாக கவனித்து வருகிறார். ஜம்மு-காஷ்மீரில் நிலவும் நிலையில்லாத் தன்மை குறித்தும் அவர் ஆராய்ந்து வருகிறார். அந்தப் பிராந்தியத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பமாகும். 

இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை விடுத்தால், அதை ஏற்க அவர் தயாராக உள்ளார். ஆனால், மத்தியஸ்தம் தொடர்பாக இந்தியா எந்தவித கோரிக்கையையும் தற்போது வரை விடுக்கவில்லை. பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் உச்சிமாநாட்டில், பிரதமர் மோடியிடம் காஷ்மீர் விவகாரம் குறித்த தன்னுடைய நிலைப்பாட்டை அதிபர் டிரம்ப் தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது.
அப்போது, ஜம்மு-காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அங்குள்ள மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பது தொடர்பாகவும் பிரதமர் மோடியிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி அதிபர் டிரம்ப் வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் தகுந்த ஆலோசனைகளை அதிபர் டிரம்ப் வழங்கி வருகிறார். இந்நிலையில், ஜி-7 மாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என்றார் அந்த அதிகாரி.
பிரான்ஸில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார். அங்கு அதிபர் டிரம்ப்பை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சின்மயானந்தா சிறையில் அடைப்பு
வரிச்சலுகை அறிவிப்பு எதிரொலி: மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகம்
கார்ப்பரேட் வரியைக் குறைத்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு: பங்குச் சந்தைகளில் அதிரடி உயர்வு
உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  
மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்ட பிறகும் பங்களாவை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்கள்!