வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு: இருதரப்பு உயர்நிலைக் குழு பேச்சுவார்த்தை

DIN | Published: 24th August 2019 01:12 AM


இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான உறவில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு உயர்நிலைக் குழு விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியது. 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரு நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையே நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் கூறப்பட்டதாவது: 
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டெரே நகரில் இந்திய-அமெரிக்க உயர்நிலைக் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. 
இந்தியக் குழுவில் வெளியுறவுத் துறை இணைச் செயலர் கெளரங்கலால் தாஸ், பாதுகாப்புத் துறை இணைச் செயலர் வி. ஆனந்தராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அமெரிக்க குழுவில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணைச் செயலர் (பொறுப்பு) ஆலிஸ் வெல்ஸ், இந்திய-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பாதுகாப்புத் துறை துணைச் செயலர் ராண்டல் ஷ்ரிவர்  ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 
இந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில், பிராந்திய ரீதியிலான மாற்றங்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது. மேலும், சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டது. 
மேலும், முதல்கட்ட 2+2 பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து இந்திய-அமெரிக்க குழுவினர் பேச்சு நடத்தினர். 
இரு நாடுகளுக்குமான பொது நலன் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறையில் பரஸ்பர அளிக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. 
இந்தியா-அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவார்த்தை மேற்கொள்வதென, கடந்த 2017 ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.  
அதன்படி, இரு நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 2-ஆம் கட்ட 2+2 பேச்சுவார்த்தையானது, அடுத்த இரு மாதங்களில் வாஷிங்டனில் நடைபெறவுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வரிச்சலுகை அறிவிப்பு எதிரொலி: மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் வர்த்தகம்
கார்ப்பரேட் வரியைக் குறைத்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு: பங்குச் சந்தைகளில் அதிரடி உயர்வு
உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு  
மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்ட பிறகும் பங்களாவை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்கள்!
விக்ராந்திலிருந்து மின்னணு பொருட்கள் திருட்டு: நினைத்ததை விடவும் மிகப் பயங்கரமாகும் விஷயம்