ப.சிதம்பரத்துக்கு ஆக.26 வரை சிபிஐ காவல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை சிபிஐ காவல் விதித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. 
சிபிஐ சிறப்பு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு ப.சிதம்பரத்தை அழைத்துவரும் அதிகாரிகள்.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு ப.சிதம்பரத்தை அழைத்துவரும் அதிகாரிகள்.


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை சிபிஐ காவல் விதித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. 

இந்த வழக்கில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது நியாயமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. 
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி அஜய் குமார், சிபிஐ காவலின்போது விதிகளின்படி 48 மணி நேரத்துக்கு ஒருமுறை சிதம்பரத்துக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், காவலில் இருக்கும் சிதம்பரத்தை அவரது குடும்பத்தினரும், வழக்குரைஞரும் தினமும் அரைமணி நேரம் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு அறிவுறுத்தினார். 
முன்னதாக, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரம், சிபிஐ காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சிபிஐ குழுவினரால் உடனடியாக நீதிமன்ற வளாகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். 

சிபிஐ மற்றும் சிதம்பரம் தரப்பு வாதங்களை சிறப்பு நீதிபதி அஜய் குமார் சுமார் ஒன்றரை மணி நேரம் கேட்டறிந்தார். சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், சிதம்பரம் தரப்பில் வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வியும் ஆஜராகி வாதாடினர். 

சிபிஐ காவல் அவசியம்: சிபிஐ சார்பாக துஷார் மேத்தா வாதாடியதாவது: 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ள சதியை வெளிக்கொண்டுவர வேண்டியுள்ளது. வழக்கின் மூலம் வரை சென்று விசாரிக்க வேண்டிய தேவை இருப்பதால், சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமாகும். 
முன்னதாக, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூட இந்த வழக்குக்காக காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டுள்ளார். 
வழக்கு விசாரணைக்கு சிதம்பரம் தகுந்த ஒத்துழைப்பு அளிப்பதில்லை. விசாரணையின்போது அவர் அளிக்கும் பதில்களும் மழுப்பலாகவே உள்ளன. இந்த வழக்கில் சிதம்பரத்திடம் இருந்து சிபிஐ வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெறவில்லை. ஆனால், வழக்கின் வேர் வரை சென்று விவரங்களை அறிவதற்கு சிபிஐக்கு உரிமை உள்ளது.
மிகவும் புத்திசாலியாக இருக்கும் சிதம்பரம், வழக்குக்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்காமல் போகும் நிலை உள்ளது. வழக்கு தொடர்பான சில உண்மைகளை திறந்த நீதிமன்றத்தில் கூற இயலாது. பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையின் அடிப்படையில் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.  சில ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சிதம்பரத்தை விசாரிக்க வேண்டியுள்ளது என்று துஷார் மேத்தா வாதாடினார்.

சிபிஐ காவல் அவசியமில்லை: சிபிஐ தரப்பு வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதாடியதாவது: சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் ஏற்கெனவே ஜாமீனில் வெளியில் உள்ளனர். 

வழக்கு விசாரணை குறித்து சிபிஐ கூறுவதை அப்படியே உண்மையாக எடுத்துக்கொள்ள இயலாது. 
முன்னதாக, தாம் கைது செய்யப்படும்போது, கடந்த 24 மணி நேரமாக தாம் உறங்கவில்லை என்பதால், வியாழக்கிழமை காலையில் தன்னை காவலில் எடுக்குமாறு சிபிஐ அதிகாரிகளிடம் சிதம்பரம் கூறினார். ஆனால் அதை ஏற்காத சிபிஐ அதிகாரிகள் இரவிலேயே அவரை கூட்டிச் சென்றனர். 
வழக்கு தொடர்பான ஆவணம் சிதம்பரத்திடம் இருப்பதாக குற்றம்சாட்டும் சிபிஐ, அதை சமர்ப்பிக்குமாறு சிதம்பரத்துக்கு கடிதம் எழுதியிருக்கலாம். இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்று கபில் சிபல் வாதாடினார். 

தப்பிச் செல்லும் எண்ணம் இல்லை: சிதம்பரம் தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்குரைஞரான அபிஷேக் எம். சிங்வி வாதாடியதாவது: 
வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடும் எண்ணம் சிதம்பரத்துக்கு இல்லை. இந்த வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் அடிப்படையிலேயே சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. 
சிதம்பரத்தின் பதில்கள் மழுப்பலாக உள்ளது என்ற அடிப்படையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோர இயலாது. இந்த வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக சிபிஐ தரப்பிலிருந்து எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை. சிதம்பரம் புதன்கிழமை கைது செய்யப்பட்டது முதல் சிபிஐ அவரிடம் பழைய கேள்விகளையே கேட்டு வருகிறது என்று அபிஷேக் சிங்வி வாதாடினார்.

நியாயமானது: இருதரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் உண்மைகளையும், சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டால், சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் விதிப்பது நியாயமானது எனத் தெரிகிறது. எனவே, வரும் 26-ஆம் தேதி வரை அவருக்கு சிபிஐ காவல் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். 

சிதம்பரம் விளக்கம் தர அனுமதி: முன்னதாக, சிதம்பரம் தன் தரப்பு வாதங்களை தானே முன்வைப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். அதற்கு சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், நீதிமன்றம் சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கியது. 
அப்போது சிதம்பரம், 2018 ஜூன் 6-ஆம் தேதி முதல் முறையாக சிபிஐ விசாரணைக்கு அழைத்தது. அப்போது ஆஜராகி அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். 
எனக்கு வெளிநாட்டில் வங்கிக் கணக்கு உள்ளதா எனக் கேட்டார்கள். இல்லை என்றேன். எனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அத்தகைய வங்கிக் கணக்கு இருக்கிறதா என்று கேட்டார்கள். ரிசர்வ் வங்கி அனுமதியுடன் அவர் வைத்திருப்பதாகக் கூறினேன் என்று கூறினார்.

விசாரணை அதிகாரி மாற்றம்: சிதம்பரத்துடன் தொடர்புடைய ஐஎன்எக்ஸ் வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத் துறை அதிகாரி ராகேஷ் அஹுஜா, தில்லி காவல்துறை பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.  அமலாக்கத் துறையில் ராகேஷ் அஹுஜாவின் பணிக்காலம் 3 வாரங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்ததாகவும், அதனால் அவர் காவல்துறை பணிக்கு மாற்றப்பட்டதாகவும் அமலாக்கத் துறை விளக்கமளித்துள்ளது. 

நாற்காலியை தவிர்த்த சிதம்பரம்: 
முன்னதாக, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணையின்போது, சிதம்பரம் குற்றவாளிக் கூண்டில் அமைதியாக நீண்டநேரம் நின்றிருந்தார். 
சிபிஐ மற்றும் சிதம்பரம் தரப்பு வாதங்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. எனவே, சிதம்பரம் அமர்ந்துகொள்வதற்காக அவருக்கு நாற்காலி வழங்கப்பட்டது. எனினும் அவர், வேண்டாம்; நன்றி என்று கூறி அந்த நாற்காலியை தவிர்த்தார்.

வழக்கு விவரம்: கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு   கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஐஎன்எக்ஸ் வழக்கில் தாம் கைது செய்யப்படாமலிருக்க தடை கோரி சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறுகிறது. 
முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ தன்னைக் கைது செய்யாமலிருப்பதற்காக முன்ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக.20) தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிதம்பரத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  ஆனால், அந்த மேல்முறையீட்டு மனுவை புதன்கிழமை கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், அதை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்று கூறியதுடன், அதுதொடர்பான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிட்டது. இதையடுத்து புதன்கிழமை இரவில் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com