இந்தியா

நிலவைப் படம் பிடித்து அனுப்பியது சந்திரயான்-2: அப்போலோ, மேர் ஓரியண்டல் பள்ளத்தாக்குகளை தெளிவாக காட்டும் புகைப்படம்

23rd Aug 2019 01:03 AM

ADVERTISEMENT


நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டு நிலவின் நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் சந்திரயான்-2 விண்கலம், முதன் முறையாக நிலவைப் படம்பிடித்து அனுப்பியுள்ளது.
லேண்டரில் உள்ள எல்.ஐ.4 கேமரா மூலம் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. நிலவில் இடம்பெற்றிருக்கும் அப்போலோ பள்ளத்தாக்கு மற்றும் மேர் ஓரியண்டல் பள்ளத்தாக்குகள் இந்தப் புகைப்படத்தில் தெளிவாகக் காட்சியளிப்பது விஞ்ஞானிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, புவி சுற்றுவட்டப் பாதையைச் சுற்றி வந்தது.
முதல் படம்: அவ்வாறு புவியை சுற்றிவந்துகொண்டிருந்த விண்கலம், லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள எல்.ஐ.4 கேமரா மூலமாக ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று பூமியை மிக அழகாகவும், தெளிவாகவும் புகைப்படங்கள் எடுத்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது. இந்தப் புகைப்படங்களை பொதுமக்களின் பார்வைக்காக இஸ்ரோ வெளியிட்டது.
தொடர்ந்து புவியை சுற்றிவந்த விண்கலம், கடந்த 14-ஆம் தேதி நிலவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தது. ஆறு நாள்கள் பயணத்துக்குப் பின்னர் கடந்த 20-ஆம் தேதி நிலவின் நீள்வட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அடுத்த நாளான புதன்கிழமை சுற்றுப்பாதை குறைப்பு நடவடிக்கையையும் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இதன் மூலம் விண்கலம் தற்போது நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 118 கி.மீ. , அதிகபட்சம் 4,412 கி.மீ. தொலைவிலான நீள்வட்டப் பாதையில் நிலவைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.
இரண்டாவது படம்: இந்த நிலையில், நிலவைச் சுற்றிவரும் விண்கலம் லேண்டரில் உள்ள எல்.ஐ. 4 கேமரா மூலமாக, நிலவை இப்போது படம்பிடித்து அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு 7.03 மணியளவில், நிலவின் பரப்பிலிருந்து 2,650 கி.மீ. தொலைவில் இந்தப் புகைப்படம் 
எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகைப்படத்தை பொதுமக்கள் பார்வைக்காக இஸ்ரோ வியாழக்கிழமை வெளியிட்டது. இந்தப் புகைப்படத்தில் நிலவில் பரப்பில் இடம்பெற்றிருக்கும் அப்போலோ மற்றும் மேர் ஓரியண்டல் பள்ளத்தாக்குகள் தெளிவாகக் காட்சி தருகின்றன.
அப்போலோ பள்ளத்தாக்கு: நிலவின் தெற்கு அரைவட்டப் பரப்பில் இடம்பெற்றிருப்பது இந்த அப்போலோ பள்ளத்தாக்கு. விண்கல் தாக்குதலால் ஏற்பட்டது. இது 538 கி.மீ. பரப்பளவைக் கொண்ட இந்தப் பள்ளத்தாக்கு, இரண்டு அடுக்குகளைக் கொண்ட வட்ட வடிவ பள்ளத்தாக்காக அமைந்திருக்கிறது.
மேர் ஓரியண்டல் பள்ளத்தாக்கு: இது அப்போலோ பள்ளத்தாக்கைவிட மிகப் பெரியது. 900 கி.மீ. பரப்பளவைக் கொண்ட இந்த பள்ளத்தாக்கு நிலவின் மேற்கே மிக ஓரத்தில் அமைந்துள்ளது. 
பெரிய மலைகளையும், முகட்டுகளுடன் மூன்று அடுக்குகளையும் கொண்ட வட்ட வடிவ பள்ளத்தாக்கு ஆகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT